எத்தியோப்பியாவில் பட்டினியால் உயிரிழப்போர் அதிகரிப்பு : ஐ.நா விடுத்துள்ள எச்சரிக்கை!
எத்தியோப்பியாவின் டிக்ரே (Tigray) பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் 200 க்கும் மேற்பட்டோர் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான வரட்சி மற்றும் போரால் ஏற்பட்ட பாதிப்புக்கள் இந்த நிலைக்கு காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், அட்வா பகுதியை சேர்ந்த 16 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடு
இந்த நிலையில், தற்போது 47 வீதமானோர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், டிக்ரே பகுதியில் வாழும் 89 வீதமான மக்களுக்கு தற்போது உணவு உதவி தேவைப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மனிதாபிமான உதவிகள்
எவ்வாறாயினும், எத்தியோப்பியாவுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் சரிவர கிடைக்கப் பெறுவதில்லை என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்படக் கூடியவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், பட்டினியில் உயிரிழக்கும் அதிகளவானோர் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் என அவர்கள் கூறியுள்ளனர்.
ஐ.நாவின் தரவுகள்
ஐ.நாவின் தற்போதைய தரவுகளுக்கமைய, சுமார் 20 மில்லியன் மக்கள் உணவுத் தேவையுடன் எத்தியோப்பாவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் எத்தியோப்பாவில் பஞ்சம் அதிகரிக்குமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.