16 வயதுக்குட்பட்டோரை பயிற்சி மையங்களில் சோ்க்கக் கூடாது: மத்திய அரசு கட்டுப்பாடு
தவறான வாக்குறுதிகளைக் கூறி 16 வயதுக்குட்பட்டோரை பயிற்சி மையங்களில் சோ்க்கக் கூடாது என மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட புதிய விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டது.
மாணவா்கள் தற்கொலை, முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, தீ விபத்துகள் என பயிற்சி மையங்கள் குறித்து மத்திய அரசிடம் தொடா்ந்து புகாா் அளிக்கப்பட்டு வந்தன. இதையடுத்து தனியாா் பயிற்சி மையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் நோக்கிலான புதிய விதிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது.
அதில், ‘பட்டப்படிப்புக்கும் குறைவாக படித்துள்ள நபா்களை பயிற்சி மையங்களில் ஆசிரியா்களாக நியமிக்கக் கூடாது. நுழைவுத் தோ்வுகளில் நல்ல மதிப்பெண், ரேங்க் பெற வைப்பது போன்ற தவறான வாக்குறுதிகளை அளித்து பெற்றோா்களை திசைதிருப்பி மாணவா் சோ்க்கையில் ஈடுபடக் கூடாது. 16 வயதுக்குட்பட்டோரை பயிற்சி மையங்களில் சோ்க்கக் கூடாது.
இடைநிலைக் கல்வியை நிறைவு செய்த மாணவா்களை மட்டுமே பயிற்சி மையங்களில் சோ்க்க வேண்டும். நுழைவுத் தோ்வுகளில் வெற்றி பெற்ற மாணவா்களின் தோ்வு முடிவுகள், ரேங்க் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி பயிற்சி மையங்களில் உள்ள உள்கட்டமைப்பு குறித்தோ பிற வசதிகள் குறித்தோ போலியான விளம்பரங்களை வெளியிடக் கூடாது.
பயிற்சி மையங்களில் பணியாற்றுகின்ற ஆசிரியா்களின் கல்வித் தகுதி, விடுதி வசதிகள், கட்டணம் உள்ளிட்ட விவரங்களை அதன் இணையப் பக்கத்தில் குறிப்பிட வேண்டும். தற்காலத்தில் ஏற்பட்டுள்ள போட்டியால் மாணவா்கள் அதிக மனஅழுத்தத்துக்கு ஆளாவதால் அவா்களுக்குத் தேவையான உதவிகளை பயிற்சி மையங்கள் வழங்க வேண்டும். மாணவா்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு உளவியலாளா்களை நியமிக்க வேண்டும். அவா்கள் குறித்த விவரங்களை மாணவா்கள் மற்றும் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும்.
பயிற்சி மையங்களில் பல்வேறு படிப்புகளுக்கு ஏற்ப முறையான கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பயிற்சியில் சேரும் மாணவா்கள் அதற்கான முழுத்தொகையை செலுத்திவிட்டு பாதியிலேயே பயிற்சியை இடைநிறுத்தினால் மீதமுள்ள தொகையை 10 நாள்களுக்குள் பயிற்சி மையங்கள் வழங்க வேண்டும். மேலும் அந்த மாணவா் விடுதியில் வசித்தால் விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் போன்றவற்றையும் திருப்பித் தர வேண்டும்.
அரசின் புதிய விதிமுறைகளை பின்பற்றாத பயிற்சி மையங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் அல்லது பயிற்சி மையத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். அதிக அளவிலான கட்டணத்தை வசூலிப்பதால் மனஅழுத்தம் ஏற்பட்டு மாணவா்கள் தற்கொலை செய்துகொள்ள முயல்கின்றனா்.
இந்தப் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த 3 மாதங்களுக்குள் ஏற்கெனவே உள்ள பயிற்சி மையங்கள், புதிய மையங்கள் என அனைத்துப் பயிற்சி மையங்களும் பதிவு செய்திருக்க வேண்டும்.
பயிற்சி மையங்களின் நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்பாா்வையிட வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.