;
Athirady Tamil News

நிலவில் வெற்றிகரமாக தடம் பதித்த “மூன் ஸ்னைப்பர்” விண்கலம்: 5வது நாடாக சாதித்த ஜப்பான்

0

நிலவின் மேற்பரப்பில் தங்களுடைய “மூன் ஸ்னைப்பர்” விண்கலத்தை ஜப்பான் வெற்றிகரமாக நிலை நிறுத்தியுள்ளது.

சாதித்த ஜப்பான்
நிலவில் தடம் பதிக்கும் ஜப்பானின் கனவானது, “மூன் ஸ்னைப்பர்”(Moon Sniper) என்று அழைக்கப்படும் SLIM விண்கலம் மூலம் நிறைவேறியுள்ளது.

ஜப்பானின் இந்த SLIM விண்கலமானது உள்ளூர் நேரப்படி(1520 GMT Friday) அதிகாலை 12.20 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியதுடன், பூமியுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்தியது என்று ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) தெரிவித்துள்ளது.

மேலும் SLIM விண்கலம் அதன் இலக்கில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் தரையிறங்க முயற்சித்தது என்றும் JAXA தெரிவித்துள்ளது.

மிக குறைந்த எடையில் வடிவமைக்கப்பட்ட SLIM விண்கலத்தின் JAXA தொழில்நுட்பம், வருங்காலத்தில் நிலவின் மலைப்பாங்கான துருவங்களில் தண்ணீர், எரிபொருள், ஆக்சிஜன் ஆகியவை தொடர்பான ஆராய்ச்சியை செய்ய சக்தி வாய்ந்த கருவியாக மாறும்.

தற்போதைய நிலவரங்களின் படி, SLIM விண்கலம் உயர் இலக்குகளை அடைந்துள்ளதா என்று கூற ஒரு மாத காலம் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் SLIM விண்கலத்தின் சோலார் பேனல்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலாததால், தற்போது தன்னுடைய பேட்டரி திறன் கொண்டு மட்டுமே SLIM விண்கலம் இயங்கி வருகிறது.

சோலார் பேனல்கள் தவறான கோணங்கள் திரும்பியதால் இந்த பின்னடைவு ஏற்பட்டு இருக்கலாம் என்றும், விண்கலத்தில் இருந்து தரவுகளை பூமிக்கு கொண்டு வருவது மட்டுமே தற்போதைய முக்கிய குறிக்கோள் என்று ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (JAXA) தலைவர் Hitoshi Kuninaka தெரிவித்துள்ளார்.

நிலவில் தடம் பதிக்கும் 5வது நாடு
நிலவின் மேற்பரப்பில் இதுவரை அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் முன்னாள் சோவியத் யூனியன் ஆகிய நான்கு நாடுகள் தடம் பதித்து இருந்தன.

இந்நிலையில் “மூன் ஸ்னைப்பர்” என்ற SLIM விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை அடுத்து இந்த பட்டியலில் 5வது நாடாக ஜப்பானும் இணைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.