இஸ்ரேலில் 1500-த்திற்கும் மேற்பட்ட பெண்கள் அணிவகுப்பு!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 100 நாள்களைத் தாண்டி நடந்துகொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலின் தெல் அவிவி பகுதியில் 1500க்கும் அதிகமான பெண்கள் தெருக்களில் அணிவகுத்தனர்.
இஸ்ரேல் அரசினை பிணைக் கைதிகளை உடனடியாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தும் முழக்கங்களை எழுப்பினர். வலைதளங்களில் பரவிவரும் காணொலிகளில் பெண்கள் குறியீட்டுப் பலகைகளோடு அணிவகுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
“நேரம் தாழ்த்தாதே” “உலகமே விழித்துக்கொள்” என்பது போன்ற சொற்றொடர்கள் எழுதிய பலகைகளை கையில் ஏந்தி அணிவகுத்துச் சென்றனர். பெண்கள் உரிமைகள் அமைப்பு துவங்கிய இந்த அணிவகுப்பில் பல ஆண்களும் கலந்துகொண்டுள்ளனர்.
அக்டோபர் 7 ஹமாஸால் பிடித்துச் செல்லப்பட்ட 253 பிணைக் கைதிகளில் 132 பேர் காஸாவில் இன்னும் இருப்பதாக தெரிவிக்கும் இஸ்ரேல் அரசு, 107 பேர் மட்டுமே உயிருடன் இருக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கிறது.
இஸ்ரேலின் போர் விவகாரத்துறை அமைச்சரான காடி எய்சென்காட், ஹமாஸ் அமைப்பினருடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி கைதிகளை காப்பாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.