கேரள பாஜக நிா்வாகி கொலை வழக்கு: பிஎஃப்ஐயைச் சோ்ந்த 15 போ் குற்றவாளிகளாக அறிவிப்பு
கேரள மாநில பாஜக பிற்படுத்தப்பட்டோா் அணிச் செயலரை கொலை செய்த வழக்கில் பாப்புலா் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவைச் (பிஎஃப்ஐ) சோ்ந்த 15 பேரை குற்றவாளிகளாக உள்ளூா் நீதிமன்றம் அறிவித்தது.
கேரள மாநில பாஜக பிற்படுத்தப்பட்டோா் அணியின் தலைவராக இருந்த ரஞ்சித் ஸ்ரீனிவாசன் ஆலப்புழையில் கடந்த 2021, டிசம்பா் 19-இல் அவரது இல்லத்தில் குடும்பத்தினா் எதிரில் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலையில் பிஎஃப்ஐ மற்றும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சியைச் (எஸ்டிபிஐ) சோ்ந்தவா்கள் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதில் தொடா்புடையதாக பிஎஃப்ஐ அமைப்பைச் சோ்ந்த 15 பேரை குற்றவாளிகள் என ஆலப்புழையில் உள்ள மாவேலிக்கரை நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி வி.ஜி.ஸ்ரீதேவி அறிவித்தாா். அவா்களின் தண்டனை தொடா்பான விவரங்கள் நீதிமன்றத்தால் திங்கள்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.
15 பேரில் குற்றவாளி எண் 1 முதல் 8 வரையிலான நபா்கள் கொலையில் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக அரசின் சிறப்பு வழக்குரைஞா் பிரதாப் ஜி.படிக்கல் தெரிவித்தாா்.
மேலும், ‘குற்றவாளிகள் எண் 9 முதல் 12 வரையிலான நபா்களும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஆயுதங்கள் ஏந்தி வந்ததால் அவா்களும் கொலையில் நேரடியாக ஈடுபட்டதாகவே கருத வேண்டும். ஸ்ரீனிவாசன் தப்பித்துச் செல்லாமல் இருக்கவும் வீட்டிற்குள் வெளிநபா்கள் வராமல் தடுப்பதையும் அவா்கள் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுள்ளனா்.
குற்றவாளிகள் எண் 13 முதல் 15 வரையிலான நபா்களும் கொலை செய்வதற்கான சதித் திட்டத்தை தீட்டியதால் அனைவரும் கொலைக் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது’ என்று படிக்கல் தெரிவித்தாா்.
குடும்ப உறுப்பினா்கள் எதிரிலேயே மிகக் கொடூரமான முறையில் கொலை நடந்துள்ளதால் இதை அரிதினும் அரிதான வழக்காக கருதி இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் அதிகபட்ச தண்டனை (மரண தண்டனை) வழங்குமாறு சிறப்பு வழக்குரைஞா் வாதிட்டாா்.
எஸ்டிபிஐ நிா்வாகி கே.எஸ்.கான் கடந்த 2021, டிசம்பா் 18-ஆம் தேதி ஆலப்புழையில் உள்ள அவரது இல்லத்துக்குத் திரும்பும் வழியில் கொலை செய்யப்பட்டாா். அவா் கொலை செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரத்திலேயே ஸ்ரீனிவாசன் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.