கொலை வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை
: மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்ட நீதிமன்றம், 2015-ல் நடந்த கட்டட தொழில் உரிமையாளரின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட நீதிபதி பி.ஆர்.அஷ்துர்கர் அமர்வில் தீர்ப்பு வழங்கினார். கொலை, குற்றச் செயலில் ஈடுபட்டது, தடயங்களை அழித்தது உள்ளிட்ட பிரிவுகளில் குற்றத்தை உறுதி செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பின் நகல் சனிக்கிழமை கிடைக்கப்பெற்றது.
கட்டட தொழில் உரிமையாளர் கணேஷ் மனியா சாவன், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சந்தோஷ் சவானுக்கு ரூ. 2 லட்சம் கடனாக கொடுத்திருந்தார். சந்தோஷ் திருப்பி செலுத்தவில்லை.
இந்த நிலையில் செப்.26,2015 அன்று கணேஷ் அவரது நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது சந்தோஷ் மற்றும் சில நபர்கள் ஆயுதம் கொண்டு அவரை தாக்கினர். அந்த தாக்குதலில் கணேஷ் பலியானார்.
இதில் தொடர்புடையதாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றம் நான்கு பேருக்குத் தண்டனையை உறுதிசெய்துள்ளது. அவர்கள் தலா ரூ.14,000 அபராதமாக செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மீதி மூவரில் ஒருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இருவர் தலைமறைவாகவுள்ளனர்.
பொது தரப்பில் 21 சாட்சியங்கள் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு விசாரனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.