மாத்தறையில் துப்பாக்கிச்சூடு: இலக்கு தவறியதில் இளைஞன் பலி
மாத்தறை – தெலிஜ்ஜவில பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர், இலக்கு வைக்கப்பட்ட நபர் அல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,
பாதுகாப்பு உத்தரவு
“மாத்தறை – மாலிம்படை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலிஜ்ஜவில சந்தியில் நேற்று (20.01.2024) இரவு 08 மணி அளவில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிரிவி கருவியிலும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் தொலைபேசி உபகரணக் கடைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதன்போது குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 22 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தெனிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மிந்திக அளுத்கமகே எனவும், அவர் தனது கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்வதற்காக கடைக்கு வந்துள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட்டதுடன், கடையின் உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மாத்தறை பிரதான நீதவான், அவரை பொலிஸ் காவலில் எடுத்து பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.” என்றார்.