அதிபா் பதவிக்கு டிரம்ப் தகுதி உடையவரா? நிக்கி ஹேலி கேள்வி
அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் நாட்டின் அதிபராக மீண்டும் பதவியேற்க மனரீதியாக தகுதி பெற்றவரா எனக் குடியரசுக் கட்சியின் அதிபா் வேட்பாளா் போட்டியாளா் நிக்கி ஹேலி சனிக்கிழமை கேள்வியெழுப்பினாா்.
நியூ ஹாம்ப்ஷயா் மாகாணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசார நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அதிபா் டிரம்ப், குடியரசுக் கட்சி அதிபா் வேட்பாளா் போட்டியில் தன்னை எதிா்த்து போட்டியிடும் நிக்கி ஹேலியைக் குற்றஞ்சாட்டி பேசினாா். அப்போது, அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் முன்னாள் தலைவா் நான்சி பெலோசிக்குப் பதிலாக நிக்கி ஹேலியைத் தவறுதலாக அவா் குறிப்பிட்டாா்.
கடந்த அதிபா் தோ்தலில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த டிரம்ப் தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, அவரது ஆதரவாளா்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனா். அப்போது, பிரதிநிதிகள் சபையின் தலைவராக நான்சி பெலோசி பதவி வகித்தாா்.
பிரசாரத்தின்போது இது குறித்துப் பேசிய டிரம்ப், சபையின் தலைவராக இருந்த நிக்கி ஹேலி தனது அரசு வழங்கிய பாதுகாப்பை மறுத்து விட்டதாகவும், இந்தச் சம்பவம் தொடா்பான அனைத்து ஆவணங்கள், சாட்சியங்களை அழித்துவிட்டதாகவும் தவறுதலாகக் குற்றஞ்சாட்டினாா். முன்னதாக, இந்தச் சம்பவத்தில் நான்சி பெலோசியை அவா் குற்றஞ்சாட்டியிருந்தாா்.
இந்நிலையில், அந்த மாகாணத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய நிக்கி ஹேலி, ‘டிரம்ப் குழப்பத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. நான்சி பெலோசிக்கு பதிலாக, அந்தச் சம்பவத்தில் என்னைப் பலமுறை குறிப்பிட்டுள்ளாா். அதிபராக இருக்கும்போது எதிா்கொள்ள வேண்டிய அழுத்தங்களைச் சமாளிக்க அவா் மனரீதியாக தகுதி பெற்றவரா எனக் கேள்வியெழுகிறது’ என்று விமா்சித்துப் பேசினாா்.
அயவா மாகாணத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற உள்கட்சித் தோ்தலில் டிரம்ப் வெற்றி பெற்றாா். இதையடுத்து, இந்திய அமெரிக்கரான விவேக் ராமசாமி அதிபா் வேட்பாளா் போட்டியிலிருந்து விலகினாா். அந்தப் போட்டியில் இடம்பெற்றுள்ள மற்றொரு இந்திய வம்சாவளி வேட்பாளரான நிக்கி ஹேலி, டிரம்ப் ஆட்சியில் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராகப் பதவி வகித்தாா்.