இந்தியாவின் அரச நிகழ்வில் கலந்து கொள்ள தலிபான் தூதருக்கு அழைப்பு
இந்தியாவின் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தலிபான் தூதருக்கு அங்குள்ள இந்திய தூதரகம் அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் தலிபான் தூதர் பத்ருதீன் ஹக்கானி மற்றும் அவரது மனைவிக்கு அழைப்பிதழ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்பார்ப்புகளுக்கு அப்பால், இது இந்தியாவையும் தாலிபனையும் நெருக்கமாகக் கொண்டுவரும் ஒரு முக்கியமான மாற்றமாகும் தலிபான் சார்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தலிபான் தூதருக்கு அழைப்பு
மேலும், இந்திய பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், காபூலில் மட்டுமல்லாது, முக்கியமான பகுதிகளின் தலைநகரங்களிலும் தலிபான்களுடன் உறவுகள் நீடிக்கப்பட்டுள்ளதான தகவல்களும் அண்மையில் வெளியாகியிருந்தன.
இதற்கமைய சில மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரிகள் வெளியேறியதும், டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடப்பட்டதும் ஒரு சகாப்தத்தின் முடிவாக கருதப்பட்டது.
இந்நிலையில் தலிபான் தூதருக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ் வழக்கமான ஒரு நடைமுறைதான் என்றும், இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்திய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தலிபான்களுடன் இந்திய உறவை
மேலும், தலிபான்களுடன் இந்தியா தனது உறவை இயல்பாக்குகிறது என்ற கூற்றை அதிகாரிகள் நிராகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பின் (UNHCR) கூற்றுப்படி, 2021 இல் தலிபான் அமைப்பினர் ஆட்சிக்கு வந்த பிறகு, 16 இலட்சத்திற்கும் அதிகமான குடிமக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.
சிரியா மற்றும் உக்ரைனுக்கு அடுத்தபடியாக, ஆப்கானிஸ்தானில்தான் உலகிலேயே அதிக அகதிகள் காணப்படுகின்றனர்.