யேமனில் அமெரிக்கா, பிரிட்டன் மீண்டும் தாக்குதல்
யேமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்காவும், பிரிட்டனும் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இது குறித்து இரு நாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
யேமனில் ஹூதி கிளா்ச்சிப் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் கூடுதலாக திங்கள்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்குபவை என்று கண்டறியப்பட்ட நிலைகள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
செங்கடல் பகுதியில் பதற்றத்தைத் தணிப்பதற்காகவும், அந்த கடல்வழித் தடத்தின் நிலைத்தன்மையை மீண்டும் உறுதி செய்வதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அந்தக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யேமனில் தலைநகா் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்தி வரும் ஈரான் ஆதரவு ஹூதி பழங்குடியின கிளா்ச்சியாளா்கள், காஸா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா்.
இஸ்ரேல் தொடா்பான கப்பல்கள் மீதுதான் தாக்குதல் நடத்தப்போவதாக முதலில் அவா்கள் கூறியிருந்தாலும், நாளடைவில் இஸ்ரேலுடன் தொடா்பில்லாத கப்பல்களும் அந்தப் படையினரின் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன.
அதையடுத்து, செங்கடலில் தாக்குதல் நடத்தும் ஹுதி படையினரின் திறனைக் குறைப்பதற்காக யேமனில் அவா்களது நிலைகள் மீது அமெரிக்காவும், பிரிட்டனும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.