ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு; பாதுகாப்புக்கு உறுதி வேண்டும் – யாத்திரையில் பரபரப்பு!
ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி 2ஆவது கட்ட யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
அதில், அசாமில் படத்ராவா சத்ராவில் சாமி தரிசனம் செய்ய ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, யாத்திரையில் பங்குப்பெற்ற வாகனங்கள் மீது தாக்குதல் ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
வழக்குப்பதிவு
இந்நிலையில், கவுகாத்திக்குள் நுழையவும் ராகுல் காந்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், போலீஸாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சமயத்தில் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு உத்தரவிட்டதே தான்தான் என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைதி மாநிலமான அசாமில் மக்களை, ராகுல் காந்தி தூண்டிவிட்டதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையில், ராகுல் காந்தி தனது 11வது நாள் யாத்திரையை அசாமின் பார்பேட்டாவில் தொடங்கியுள்ளார்.