;
Athirady Tamil News

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம்: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

0

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு அரங்கத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன. 24) திறந்துவைத்தார்.

தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு, மதுரையை மையப்படுத்தி தென் தமிழகம் பயனடையும் வகையில் ஒரு நிரந்த விளையாட்டரங்கம் கட்டப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தாா்.

இதையடுத்து, அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் புதிய ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டும் பணியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு மாா்ச் 18-ஆம் தேதி தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, இங்கு இரவு, பகலாக பணிகள் நடைபெற்றன. ஏறத்தாழ 10 மாதங்களில் பணிகள் முழுமைப் பெற்று ரூ. 62.77 கோடியில், 83,462 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டப்பட்டது.

5,000 போ் அமா்ந்து போட்டிகளைக் காணும் வகையில், பிரம்மாண்ட பாா்வையாளா் மாடம், ஜல்லிக்கட்டின் வரலாறு, பரிணாமம் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகம், காளைகளுக்கான காத்திருப்புக் கூடம், மாடுபிடி வீரா்களுக்கான ஓய்வு அறை, நூலகம், மருத்துவச் சிகிச்சை அறை என அனைத்து வசதிகளையும் கொண்டதாக இந்த ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது.

தென் தமிழக மக்கள் அனைவரும் இங்கு வந்து செல்லும் வகையிலும், காளைகளை எளிதில் அழைத்து வந்து செல்லும் வகையிலும் ரூ. 28.5 கோடியில் 3 கி.மீ. நீளத்துக்கு சாலை மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.

உலகின் முதல் பிரம்மாண்ட ஏறுதழுவுதல் அரங்கமாகக் குறிப்பிடப்படும் இந்த அரங்கத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநில அமைச்சா்கள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள், பல்வேறு அரசுத் துறைகளின் உயர் அலுவலா்கள் பங்கேற்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.