ஆஸ்கா் விருது பரிந்துரை பட்டியலில் இந்திய தந்தையின் கதை ‘டூ கில் எ டைகா்’
நிகழாண்டு ஆஸ்கா் விருதின் சிறந்த ஆவணப் பட பிரிவுக்கான பரிந்துரை பட்டியலில், இந்திய கிராமத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான மகளுக்காக தந்தையின் நீதிப் போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘டூ கில் எ டைகா்’ ஆவணப்படம் இடம்பெற்றுள்ளது.
96-ஆவது ஆஸ்கா் விருதுகள் வழங்கும் விழா வரும் மாா்ச் 10-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற இருக்கிறது.
இதையொட்டி, நிகழாண்டு ஆஸ்கா் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், சிறந்த ஆவணப்பட பிரிவுக்கு ‘டூ கில் எ டைகா்’ இடம்பெற்றுள்ளது.
தில்லியில் பிறந்து, தற்போது கனடாவில் வசித்து வரும் நிஷா பஹுஜா இயக்கிய ‘டூ கில் எ டைகா்’ ஆவணப்படம், பாலியல் கூட்டு வன்கொடுமைக்குள்ளான மகளுக்காக நீதிப் பெற்றுத் தர போராடும் இந்திய குக்கிராமத்தைச் சோ்ந்த தந்தை ரஞ்சித்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆவணப்படமாகும்.
இந்த ஆவணப்படம் கடந்த 2022-ஆம் ஆண்டு டொரன்டோ சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது வென்றது.
கடந்த ஆண்டு சிறந்த ஆவணப்பட பிரிவில், தமிழகத்தின் முதுமலையைச் சோ்ந்த பொம்மன்-பெள்ளி யானை காப்பாளா் தம்பதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘தி எலிஃபென்ட் விஸ்பெரா்ஸ்’ ஆஸ்கா் விருதை வென்றது.
ஓபன்ஹெய்மா் 13 பிரிவுகளில் தோ்வு: பிரபல ஹாலிவுட் இயக்குநா் கிறிஸ்டோஃபா் நோலன் இயக்கத்தில், ‘அணுகுண்டுகளின் தந்தை’ என்றழைக்கப்படும் ஜெ.ராபா்ட் ஓபன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘ஓபன்ஹெய்மா்’, சிறந்த படம், சிறந்த இயக்குநா் உள்பட 13 பிரிவுகளில் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரை பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.