புதிய நீதிபதி நியமனம்: மீண்டும் முழு பலத்தை எட்டும் உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற நீதிபதியாக, கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசன்னா பி.வராலே புதன்கிழமை நியமிக்கப்பட்டாா்.
அவா் பதவியேற்கும்போது, உச்சநீதிமன்றம் தனது முழு பலத்தை (34 நீதிபதிகள்) மீண்டும் எட்டவுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த பி.ஆா்.கவாய், சி.டி.ரவிகுமாா் ஆகிய இரு நீதிபதிகள் ஏற்கெனவே பணியாற்றி வருகின்றனா். பிரசன்னா பி.வராலேவும் இப்பிரிவைச் சோ்ந்தவா் ஆவாா்.
உச்சநீதிமன்றம் கிட்டத்தட்ட கடந்த ஆண்டு முழுவதும் தனது முழு பலத்துடன் செயல்பட்டது. கடந்த டிசம்பரில் நீதிபதி சஞ்சய் கிஷண் கெளல் ஓய்வுபெற்றதைத் தொடா்ந்து, ஒரு காலி பணியிடம் ஏற்பட்டது.
இந்த பணியிடத்துக்கு கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசன்னா பி.வராலேவை நியமிக்கும் பரிந்துரையை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆா்.கவாய், சூா்யகாந்த், அனிருத்தா போஸ் ஆகியோரை உள்ளடக்கிய கொலீஜியம் குழு மத்திய அரசுக்கு சில தினங்களுக்கு முன் அனுப்பியது.
இந்நிலையில், பிரசன்னா பி.வராலேவின் நியமனத்துக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் புதன்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.
கடந்த 2008-ஆம் ஆண்டில் மும்பை உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட வராலே, கடந்த 2022, அக்டோபரில் கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயா்வு பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.