நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் ஆபத்தானது: அமெரிக்கா கடும் கண்டனம்
அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆபத்தானது என்று அமெரிக்கத் தூதுவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியொன்றின் மூலம் குறித்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
குறித்த டுவிட்டர் செய்தியில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,
அமெரிக்கா கவலை
“நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் கருத்து சுதந்திரம், புத்தாக்கம் மற்றும் தனியுரிமையை அச்சுறுத்துகிறது என்று சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களால் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளது.
எனினும் அரசாங்கம் அவற்றைப் புறம் தள்ளி சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளது. இது குறித்து ஐக்கிய அமெரிக்கா கவலை கொண்டுள்ளது.
இந்த புதிய சட்டம் ஜனநாயகத்திற்கு ஆபத்தாக அமையலாம் மற்றும் அதிக கட்டுப்பாடுகள் கொண்ட புதிய சட்டங்கள் முதலீட்டை ஊக்கப்படுத்தலாம், டிஜிட்டல் பொருளாதாரத்தை சீர்குலைக்கலாம்.
மேலும், இலங்கைக்கு தேவையான பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கலாம்.
இதற்கமைய வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், சட்டத்தின் மூலம் மக்களின் குரலை நசுக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் இலங்கை அரசாங்கத்தை அமெரிக்கா வலியுறுத்துகிறது.” என ஜூலி வலியுறுத்தியுள்ளார்.