அணு ஆயுத திறன்கொண்ட ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா
கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வருகின்ற நிலையில், வடகொரியா தற்போது அணுசக்தி திறன்கொண்ட புதிய ஏவுகணையை சோதனை செய்துள்ளது.
உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர் பதற்றம் நீடிக்கிறது.
அணுசக்தி ஏவுகணை
இந்த நிலையில் அணுசக்தி திறன்கொண்ட புதிய ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளது.
இது தொடர்பாக வடகொரியாவின் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘புல்வசல்-3-31’ (Pulhwasal-3-31) என்று பெயரிடப்பட்டுள்ள அணுசக்தி திறன்கொண்ட புதிய ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாகவும், இதனால் அண்டை நாடுகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரிய இராணுவம்
முன்னதாக நேற்று மஞ்சள் கடல் பகுதியில் வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தென் கொரிய இராணுவத்தின் கூட்டுப்படைத் தலைவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வடகொரிய ராணுவத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் தென் கொரிய இராணுவம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.