ஒட்டுசுட்டான் கல்வி நிறுவனங்களின் பொறுப்பற்ற செயல்: குற்றம் சாட்டும் பெற்றோர்
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் கல்வி நிறுவனங்கள் பல இருந்தும் அவை பொறுப்பற்ற வகையில் இயங்குவதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஒட்டுசுட்டானில் நான்கு தனியார் கல்வி நிலையங்களும் இரண்டு ஆரம்ப பாடசாலைகளும், ஒரு தரம் ஆறு தொடக்கம் உயர் தரத்திற்கான பாடசாலையும் காணப்படுகின்றது.
இதன்படி உயர்தரத்தில் கலைப் பிரிவுக்குரிய இரண்டு கல்வி நிலையங்கள் காணப்படுகின்றது. கல்வி நிறுவனங்கள் காணப்பட்ட போதிலும் மாணவர்களின் அடைவுமட்டம் மந்தநிலையாக இருக்கிறதென பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
கல்வி நிறுவனங்கள்
தனியார் கல்வி நிலையங்களின் ஒழுங்கற்ற நிர்வாக கட்டமைப்பு மற்றும் பொறுப்பற்ற செயற்பாடுகளும் மாணவர்களின் அடைவுமட்டத்தை பாதிக்கிறது.
இவ்வாறு கல்வி நிலையங்களை நாடிச் செல்லும் ஆர்வமுள்ள மாணவர்களாலும் சிறந்த பெறுபேறுகளை பெறமுடியாமல் உள்ளதே கவலைக்குரிய விடயமாகும்.
ஒட்டுசுட்டான் பிரதேச கல்வி நிறுவனங்களில் உயர்தர கல்விக்காக தண்டுவான், கருப்பட்டமுறிப்பு போன்ற இடங்களிலிருந்து மாணவர்கள் வந்து கல்வி கற்கின்றனர்.
மாணவர்களிடம் காணப்படும் திறமைகளை ஆசிரியர் சமூகம் கண்டறிந்து தட்டிக் கொடுக்காத நிலையும் காணப்படுகிறது.
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் ஐந்து பாடப்பிரிவுகள் இருந்த போதும் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையும் குறைவாக காணப்படுகிறது.
இந்நிலையில், அந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் வகையில் மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்பது அவ்வூர் மக்கள் பலரின் பெரு விருப்பமாக அமைந்துள்ளது.