கங்கை நீரில் குழந்தையை மூழ்கடித்து பெற்றோரே கொன்றதாக பரவும் வீடியோ போலியானது: என்ன நடந்தது?
ரத்த புற்றுநோய் சரியாகும் என்று கூறி 5 வயது குழந்தையை கங்கை நீரில் மூழ்கடித்து பெற்றோரே கொலை செய்ததாக பரவும் வீடியோ போலியானது என்று கூறப்படுகிறது.
வீடியோ பரவல்
இந்திய தலைநகரான டெல்லியில் இருந்து உத்தராகண்ட் மாநிலம், ஹர் கி பௌரிக்கு 5 வயது ஆண் குழந்தையுடன் ஒரு குடும்பத்தினர் வந்தனர்.
அவர்கள், தங்களது குழந்தைக்கு ரத்த புற்றுநோய் இருந்ததால் கங்கை நீரில் மூழ்கி எடுத்தால் குணமாகும் என்ற நம்பிக்கையில் குழந்தையை தண்ணீரில் மூழ்க வைத்தனர். அப்போது அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பின்னர், தகவலறிந்து வந்த பொலிஸார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து குழந்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், பொலிஸார் குழந்தையின் பெற்றோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீரில் மூழ்கி குழந்தை உயிரிழக்கவில்லை
இந்த சம்பவத்தில் பொலிஸார் நடத்திய விசாரணையில் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
இது குறித்து ஹரித்துவார் பொலிஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “குழந்தையை நீரில் மூழ்கடித்து பெண் கொன்றதாக பரவும் தகவல் தவறானது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பொலிஸார் கூறுகையில், “ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் நிலை கடைசி கட்டத்துக்கு எட்டியதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் சிறுவனை அனுமதிக்க மறுத்துவிட்டது. இதனால், குழந்தையின் பெற்றோர் கடைசி நம்பிக்கையாக ஹரித்துவாருக்கு அழைத்துச் சென்றனர்.
சிறுவனுக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் நுரையீரலில் நீர் இல்லை என்றும், நீரில் மூழ்கியதால் இறக்கவில்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்” என்றனர். இது சம்மந்தமான வீடியோக்களை உண்மை இல்லாமல் பகிரக்கூடாது என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
என்ன நடந்தது?
கைது செய்யப்பட்ட குழந்தையின் பெற்றோரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையின் போது பிரேதப் பரிசோதனையில் நீரில் மூழ்கி மரணம் ஏற்படவில்லை என்று தெரிந்ததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
சிறுவனின் பெற்றோரை டெல்லியில் இருந்து ஹரித்துவாருக்கு அழைத்து வந்த டாக்சி ஓட்டுநர் ரஞ்சித் குமார் சேனல் ஒன்றிற்கு பேசுகையில், “சிறுவன் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவர் டாக்சியில் அமர்ந்த சிறிது நேரத்திலேயே உடலில் அசைவுகள் இல்லை. சிறுவனுடன் பெற்றோரும் அத்தையும் இருந்தனர்.
ஆனால், சிறிது நேரத்திலேயே சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின் குழந்தையின் மூச்சு நின்றதால் தூங்கிக்கொண்டிருப்பதாக கூறினர். அங்கு சென்ற பிறகு பெற்றோர்கள் அவரை மடியில் வைத்துக்கொண்டு கங்கையில் குளிக்கச் சென்றனர்” என்றார்.
இதனிடையே இந்த குடும்பத்தின் பக்கத்து வீட்டுக் காரர் ஒருவர் கூறுகையில், “சிறுவனை காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் கூறியதால் ஏதாவது அதிசயம் நடக்கும் என்ற நம்பிக்கையில் கங்கா அன்னையின் ஆசீர்வாதத்தால் குணமடைவார் என அங்கு சென்றனர்” என்றார்.