இலங்கை கிரிக்கெட் மீதான தடை நீக்கம்: ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ள தகவல்
இலங்கை கிரிக்கெட் அணி மீதான சர்வதேச கிரிக்கெட் சபையின் இடைநிறுத்தம் அடுத்த சில நாட்களில் நீக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வத்தளையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது ஹரின் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை அணிக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை முழுமையாக நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட் மீதான தடை
சிறிலங்கா கிரிக்கெட் வாரியத்தின் உறுப்புரிமையை உடன் கடந்த வருடம் நவம்பர் 10 ஆம் திகதி ஐசிசி இடை நிறுத்தம் செய்தது.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகம், அரசியல் தலையீடு ஆகிய காரணங்களே சர்வதேச கிரிக்கெட் வாரியம் இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.