;
Athirady Tamil News

ஈரான்: உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 3 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவி சாதனை!

0

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 3 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சொந்த தயாரிப்பான சிமோர்க் ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் விண்வெளி நிறுவனம் தயாரித்துள்ள இந்த செயற்கைக்கோள்கள், தகவல்தொடர்பு மற்றும் புவிசார் தொழில்நுட்பம் குறித்த பயன்பட்டுக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஈரானின் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி அந்நாட்டு ராணுவத்துக்கு தேவையான ஏவுகணைகளை தயாரிக்க பயன்படுத்தக் கூடும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கவலை தெரிவிக்கின்றன.

முன்னதாக, இம்மாதம் 3-ஆம் தேதி பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அங்கிருந்து தங்கள் நாட்டில் செயல்பட்டு வரும் பலூச் பிரிவினைவாதிகளான ஜெய்ஷ் அல்-அதல் அமைப்பின் இரு நிலைகளில் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஈரான் கூறியது. இதன் காரணமாக பாகிஸ்தான் மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், செயற்கைக்கோள் சோதனைகள் நடத்தியிருப்பதன் மூலம், ஐ.நா. பாதுகாப்பு குழுவின் தீர்மானத்தை மீறி ஈரான் செயல்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், அணு ஆயுத திறன் வாய்ந்த எவ்வித பாலிஸ்டிக் ஏவுகணைகள் சோதனை முயற்சிகளையும் ஈரான் மேற்கொள்ளக் கூடாது எனவும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்க நுண்ணறிவுக் குழுவின், உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆய்வின்படி, செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் ராக்கெட்டுகள் தயாரிப்பின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அடுத்தகட்டமாக கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிப்பில் ஈரான் விரைவிலேயே ஈடுபடக் கூடும் என்று அச்சம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.