எலும்புக் கூடுகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட தங்க நகைகள்: ஆராய்ச்சியாளர்களுக்கு காத்திருந்த ஆச்சரியம்
உரோம் நகருக்கு அருகில் சூரிய மின் உற்பத்தி நிலையமொன்றை நிறுவுவதற்கு முன்வந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியமொன்று காத்திருந்துள்ளது.
குறித்த மின் உற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்காக ஆராய்ச்சியாளர்கள் நிலத்தை தோண்டிய போது 67 எலும்புக் கூடுகளுடன் தங்க நகைகள் மற்றும் விலையுயர்ந்த தோல் செருப்புகள் என்பன கிடைத்துள்ளன.
இவை அனைத்தும் 57 கல்லறைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதொடு இரண்டாம் மற்றும் நான்காம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என நம்பப்படுகிறது.
பெரிய ஆச்சரியம்
உரோமுக்கு வடக்கில் அமைந்துள்ள பண்டைய நகரமான டார்குனியாவுக்கு அருகில் 52 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதொடு, ஆராய்ச்சியாளர்களுக்கு இது ஒரு பெரிய ஆச்சரியமாக இருந்துள்ளது.
அதேவேளை, அந்த பகுதி இதுபோன்ற கண்டுபிடிப்புகளுக்கு பிரபலமானது என தெரியவந்துள்ளது.
கண்டுபிடிப்புகள்
மேலும், அகழ்வாராய்ச்சியின் போது, தங்க நகைகள், காதணிகள், அம்பர் மற்றும் வெள்ளி மோதிரங்களில் பொறிக்கப்பட்ட எழுத்துகள், விலையுயர்ந்த கற்கள், டெரகோட்டா மண்பாண்டங்கள், நாணயங்கள், மெருகூட்டப்பட்ட கண்ணாடிகள் மற்றும் ஆடைகள் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முன்னணி அகழ்வாராய்ச்சியாளர்களில் ஒருவரான இமானுவேல் கியானினி இது தொடர்பில் கூறுகையில், இந்த எழும்புக்கூடுகள் நகரங்களில் இருந்து வரும் மேல்தட்டு உரோமானிய குடும்பங்களின் உறுப்பினர்களுடையது என தெரிவித்துள்ளார்.