புதிய தலைவரின் நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தி-தமிழரசு கட்சியின் கல்முனைத் தொகுதிக் கிளை தெரிவிப்பு
தமிழரசு கட்சியின் வளர்ச்சிக்கு சிறந்த காத்திரமான முடிவுகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் ஶ்ரீதரன் தெரிவித்ததன் மூலம் புதிய உத்வேகத்தோடு கட்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென கல்முனைத் தொகுதிக் கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த 21 ம் திகதி வாக்கெடுப்பின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரன் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே கல்முனை கிளையினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர் தெரிவின் பின்னர் இடம்பெற்ற பொதுச்சபை கூட்டத்தில் அவர் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் கட்சியின் ஏனைய பதவிகள் தொடர்பில் மத்திய குழுவின் தீர்மானங்கள் என்பவை தொடர்பாகவும் அவ்வறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக எமது மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உப தலைவர் பதவிக்காக முன்மொழியப்பட்டமையானது அம்பாறையில் கட்சிக்கு புதிய இரத்தம் பாய்ச்சியதாக அமைந்திருக்கின்றது. பல தசாப்த காலமாக உயர் பதவிகள் கட்சியின் சார்பில் எமது மாவட்டதிற்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. இம்முறை அவ்வாறு ஒரு பதவி வழங்கி இருப்பதானது கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக தொகுதிக் கிளை சார்பில் எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துகொள்கின்றோம்.
அதேபோன்று தலைவர் தேர்வில் தமக்காக பரப்புரையில் ஈடுபட்ட சிலர் உயர்பதவிகளுக்காக சிபார்சு செய்யப்பட்டபோதிலும் கட்சியின் நலன், சமனிலைத் தன்மையை பேணல் என்பவற்றின் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டமையானது கட்சி எதிர்காலத்தில் பாரபட்சமற்று பயணிக்கும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் கட்சியினால் எடுக்கப்படவுள்ள அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமது பூரண ஒத்துழைப்பை தொகுதிக் கிளை சார்பிலும், அம்பாரை மாவட்டம் சார்பிலும் வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.