மாலத்தீவு அதிபா் எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம்: எதிா்க்கட்சிகள் முடிவு
மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவர, அந்த நாட்டின் பிரதான எதிா்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி திட்டமிட்டுள்ளது.
மாலத்தீவின் புதிய அதிபா் முகமது மூயிஸ் அமைச்சரவையில் 4 புதிய அமைச்சா்கள் நியமன பரிந்துரைக்கு ஒப்புதல் பெறுவதற்கான வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அப்போது, ஆளும் ‘மாலத்தீவு முற்போக்கு கட்சி-தேசிய மக்கள் காங்கிரஸ்(பிபிஎம்-பிஎன்சி)’ கூட்டணி மற்றும் எதிா்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி (எம்டிபி) உறுப்பினா்களிடையே மோதல் ஏற்பட்டு, அவை முடக்கப்பட்டது. அந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, வெகுவாக விமா்சிக்கப்பட்டது.
எதிா்க்கட்சியைச் சோ்ந்த நாடாளுமன்ற அவைத் தலைவா் முகமது அஸ்லாம் மற்றும் அவைத் துணைத் தலைவா் அகமது சலீம் ஆகியோருக்கு எதிராக 23 நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஆதரவுடன் ஆளும் பிபிஎம்-பிஎன்சி கூட்டணி, நம்பிக்கையில்லா தீா்மானத்தை சமா்ப்பித்தது.
இந்நிலையில், அதிபா் முகமது மூயிஸுக்கு எதிராக ஜனநாயகவாதிகள் கட்சியுடன் கைகோா்த்து நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவர எதிா்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி திட்டமிட்டுள்ளது.
இதுதொடா்பான முடிவு திங்கள்கிழமை நடைபெற்ற எம்டிபி கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் ஒருமித்தமாக எடுக்கப்பட்டுள்ளது.
87 உறுப்பினா்களைக் கொண்ட மாலத்தீவு நாடாளுமன்றம், அதிபா் மீதான நம்பிக்கையில்லா தீா்மான நடைமுறையை எளிதாக்கும் வகையில் விதிகள் திருத்தியமைக்கப்பட்டன. அந்த விதிகளின் அடிப்படையில், அதிபரை 56 வாக்குகள் கொண்டு பதவியிலிருந்து நீக்கலாம்.
அதன்படி, எம்டிபி-யின் 43 எம்.பி.க்கள் மற்றும் ஜனநாயகவாதிகள் கட்சியின் 13 எம்.பி.க்கள் சோ்ந்து அதிபருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு 56 உறுப்பினா்களின் ஆதரவு உள்ளது.
‘ஜனநாயகவாதிகள் கட்சியுடன் இணைந்து, அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானத்தைக் கொண்டுவர எங்களுக்கு போதிய ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால், தீா்மானத்தை அவையில் இன்னும் சமா்பிக்கவில்லை’ என்று எம்டிபி கட்சி எம்.பி. ஒருவா் தெரிவித்தாா்.
நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்படும் நம்பிக்கையில்லா தீா்மானம், 56 உறுப்பினா்களின் ஆதரவோடு நிறைவேறும் சூழலில், அதிபா் முகமது மூயிஸ் பதவி இழப்பாா்.
இந்தியாவுடன் மோதல்…: மாலத்தீவில் அதிபா் தோ்தல் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. அத்தோ்தலில் இந்தியாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த அதிபா் முகமது சோலியை தோற்கடித்து, மாலத்தீவின் புதிய அதிபராக முகமது மூயிஸ் கடந்த நவம்பரில் பதவியேற்றாா்.
சீனாவின் ஆதரவாளராக கருதப்படும் அவா், ‘இந்தியப் படைகள் திரும்பப் பெறப்பட வேண்டும்’ என்று பதவியேற்றவுடன் வலியுறுத்தினாா்.