அஸ்வெசும திட்டத்தில் புதிய திருத்தங்கள் : நன்மையடையப்போகும் பயனாளிகள்
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டத்தில் சில திருத்தங்களை உள்ளடக்கி நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக அதிபர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எனவே குறித்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள தீர்மானங்களாக பின்வருவன அமைகின்றன.
எட்டு இலட்சம் குடும்பங்களுக்கு
“அஸ்வெசும பயனாளியாக தகைமை பெற்றவர்களில் இடர்களுக்கு உள்ளாகியுள்ள சமூகப் பிரிவுக்கான நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கான செல்லுபடிக் காலத்தை 2024.04.01 தொடக்கம் 2024.12.31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நிலைமாறுநிலை (பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக வருமானம் இழக்கப்பட்டுள்ள) நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கான செல்லுபடிக் காலத்தை 2024.01.01 தொடக்கம் 2024.12.31 வரைக்கும் நீடித்தல்.
தற்போதுள்ள இடர்களுக்குள்ளாகிய சமூகப் பிரிவு மற்றும் நிலைமாறு சமூகப் பிரிவு (பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக வருமானம் இழக்கப்பட்டுள்ள) போன்ற இரண்டு பிரிவுகளையும் ஒன்றிணைத்து எட்டு இலட்சம் குடும்பங்களுக்காக இடர்களுக்கு உள்ளாகியுள்ள பிரிவாக 2024.01.01 தொடக்கம் கருத்தில் கொள்ளப்படும்.
சிறுநீரக நோயாளர்களுக்கு
குறித்த குடும்பங்களுக்காக 5000 ரூபா கொடுப்பனவை 2024.12.31 வரைக்கும் செலுத்தல் மற்றும் தகவல்களை உறுதிப்படுத்தும் செயன்முறையின் பின்னர் அஸ்வெசும குடும்பங்களின் பட்டியலில் காணப்படாத அடையாளங்காணப்படாத சிறுநீரக நோயாளர்களுக்கு 7,500 ரூபாவும் வழங்குதல்.
மற்றும் இயலாமையுள்ள நபர்களுக்கு 7,500 ரூபாவும், மற்றும் முதியோர்களுக்கு 3,000 ரூபாவும் 2024 ஏப்ரல் மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் மாதாந்தக் கொடுப்பனவு செலுத்தப்படும்.
தற்போது கொடுப்பனவுகளைப் பெறுகின்றவர்களும், காத்திருப்புப் பட்டியலில் பதிவு செய்யப்பட்டவர்களில் அடையாளங் காணப்படாத சிறுநீரக நோயாளர்களுக்கு 7,500 ரூபாவும், மற்றும் இயலாமையுள்ள நபர்களுக்கு 7,500 ரூபாவும், மற்றும் முதியோர்களுக்கு 3,000 ரூபாவும் 2024.01.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டு இக்கொடுப்பனவுகளை அஸ்வெசும வேலைத்திட்டத்திற்கு வெளியே மாவட்டச் செயலாளர்கள் அல்லது பிரதேச செயலாளர்கள் மூலம் மேற்கொள்ளுதல்.
அமைச்சரவை அனுமதி
இரண்டாவது சுற்றுக்காக விண்ணப்பங்களைக் கோரல் 2024 முதலாம் காலாண்டில் ஆரம்பித்து 2024 ஜூன் மாதத்தில் நிறைவு செய்யப்பட்டு ஜூலை மாதம்டக்கம் கொடுப்பனவுகளை வழங்குதல்.
மேலதிகமாக தகைமைகளைப் பெறுகின்ற குடும்பங்களை உள்வாங்குவதற்கும் தகைமை பெறுகின்ற குடும்பங்களின் மொத்த எண்ணிக்கையை உயர்ந்தபட்சம் 2.4 மில்லியன்களாகத் திருத்தம் செய்தல்.“
ஆகிய திருத்தங்களை உள்ளடக்கி நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.