சூடானில் நிலத்தகராறு : துப்பாக்கிச் சூட்டில் 54 பேர் பலி!
சூடானின் அபேய் பகுதியில் ஆயுதங்களுடன் நுழைந்த நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 54 பேர் பலியானதுடன் 60 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை (28) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வட ஆபிரிக்க நாடுகளான சூடான் மற்றும் தெற்கு சூடான் எல்லையில் அமைந்துள்ள எண்ணெய் வளம் கொண்ட அபேய் பகுதியில் இரு நாடுகளும் ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றன.
ஆபிரிக்க யூனியன் பரிந்துரை
இந்நிலையில் கடந்த 2011இல் சூடானில் இருந்து தெற்கு சூடான் சுதந்திரம் பெற்ற பின்பும், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.
அபேய் உரிமை தொடர்பாக பொது வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என ஆபிரிக்க யூனியன் பரிந்துரைத்தது. ஆனால் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. அபேய் பகுதி தற்போது தெற்கு சூடானின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தெற்கு சூடான் தன் படைகளை அபேய்க்கு அனுப்பியதில் இருந்து இரு நாடுகளின் எல்லை மோதல்கள் அதிகரித்துள்ளன.
ஐ.நா பாதுகாப்புப் படை
இதன் காரணமாக, இங்கு ஐ.நா பாதுகாப்புப் படை இயங்கி வருகிறது. எனினும், இங்கு இனக்கலவரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (28) இரவு ஆயுதங்களுடன் நுழைந்த நபர்கள் சிலர் கிராம மக்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் ஐ.நா.வின் பாதுகாப்புப் படை வீரர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 54 பேர் பலியாகியதுடன் 60 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.