காஸா: இஸ்ரேல் தாக்குதலில் 50% கட்டடங்கள் சேதம்
லண்டன்: காஸாவில் இஸ்ரேல் கடந்த அக். 7}ஆம் தேதி முதல் நடத்தி வரும் தாக்குதலில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் அழிக்கப்பட்டோ, பலத்த சேதமடைந்தோ உள்ளதாக “பிபிசி’ ஊடகம் மதிப்பிட்டுள்ளது.
இது குறித்து அந்த ஊடகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கையில், இஸ்ரேல் தாக்குதலுக்கு முன்னருக்கும், பின்னரும் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்ததில் 1.44 லட்சம் கட்டடங்களில் இருந்து 1.75 லட்சம் கட்டடங்கள் வரை சேதமடைந்துள்ளன. இது, காஸாவின் 50 முதல் 61 சதவீதம் வரையிலான கட்டடங்கள் ஆகும்.
அண்மைக் காலமாக கான் யூனிஸ் நகரில் நடத்தப்பட்டு வரும் இஸ்ரேல் தாக்குதலில் மட்டும் 38,000 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. அந்த வகையில், அந் நகரின் 46 சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.