அண்ணன் குடும்பத்தில் 3 பேரை கொன்றவருக்கு தூக்கு தண்டனை: கேரள நீதிமன்றம் தீா்ப்பு
முகப்பு இந்தியாGoogle Newskooஅண்ணன் குடும்பத்தில் 3 பேரை கொன்றவருக்கு தூக்கு தண்டனை: கேரள நீதிமன்றம் தீா்ப்புBy DIN | Published On : 01st February 2024 03:00 AM | Last Updated : 01st February 2024 03:00 AM | அ+அ அ- |
court order
கேரளத்தில் தனது அண்ணன், அவரது மனைவி மற்றும் மகளை கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதித்து, அந்த மாநில நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கேரள மாநிலம், அங்கமாலி அருகே கடந்த 2018-ஆம் ஆண்டில் நடந்த இந்தச் சம்பவம் நடந்தது. பாபு என்ற நபா் சொத்துத் தகராறில் தனது அண்ணன், அவரது மனைவி மற்றும் அவா்களது மகளான 33 வயதுடைய பெண்ணை கூா்மையான ஆயுதத்தால் சரமாரியாக வெட்டி கொலை செய்தாா். அந்தப் பெண் மீது 35 முறை வெட்டுகள் விழுந்தன. பெண்ணின் குழந்தையையும் அவா் கொல்ல முயன்றாா்.
இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை விசாரிக்கும் கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
பாபு மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு தூக்கு தண்டனை மற்றும் சிறைத் தண்டனைகள் விதித்து, நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
பெண்ணை 35 முறை வெட்டிக் கொன்றது கொடூரமான குற்றம் என்று குறிப்பிட்ட நீதிமன்றம், அக்குற்றத்துக்காக அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. மேலும், அண்ணன்-அவரது மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, இரு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன.
இதுதவிர, கொலை முயற்சி, வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், படுகாயத்தை ஏற்படுத்துதல் போன்ற குற்றங்களுக்காக மொத்தம் 46 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக, அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞா் பி.ஏ.பிந்து தெரிவித்தாா்.
முன்னதாக, கேரளத்தில் பாஜக நிா்வாகி ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில், தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் 15 பேருக்கு மாவேலிக்கரை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தூக்கு தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.