ஹேமந்த் சோரன் கைது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டிருப்பது புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி பழங்குடியின தலைவரை துன்புறுத்துவது தரம் தாழ்ந்தது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நில மோசடி, சட்டவிடோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனிடம் புதன்கிழமை(ஜன.31) 2வது முறையாக விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து 6 மணிநேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்வதாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் ஆளுநர் மாளிகை சென்று தனது ராஜிநாமா கடிதத்தை ஹேமந்த் சோரன் வழங்கினார். ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஹேமந்த் சோரனின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து ஜார்கண்டில் மூத்த அமைச்சர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பதவிக்கு ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் மற்றும் மூத்த அமைச்சர் சம்பயி சோரன் என இருவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
இதில், ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசில் மூத்த அமைச்சரான சம்பயி சோரனுக்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால், தற்போது ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கண்டன பதிவில், ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டிருப்பது மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி பழங்குடியினத் தலைவரை துன்புறுத்துவது தரம் தாழ்ந்தது. இந்த செயல் விரக்தியையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் தூண்டுகிறது.
பாஜகவின் கேவலமான தந்திரமான செயல்கள் மூலம் எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்கிவிடாது என தெரிவித்துள்ள ஸ்டாலின், பாஜகவின் பழிவாங்கும் செயல்களுக்கு தலைவணங்காமல் கம்பீரமாக இன்னல்களை எதிர்கொள்ளும் சோரனின் மன உறுதி பாராட்டுக்குரியது. அவரது உறுதிப்பாடு பாஜகவின் மிரட்டல் தந்திரங்களை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு உத்வேகம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.