பயிற்சி கருத்தரங்குகளை தவிர்த்து, செயற்பாட்டு திட்டங்களை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு
எதிர்வரும் காலங்களில் பயிற்சி கருத்தரங்குகளை தவிர்த்து, இதுவரை வழங்கப்பட்ட பயிற்சிகளை கொண்டு செயற்றிட்டங்களை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் செயற்படும் உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், வடக்கு மாகாணத்திலுள்ள அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோருடன், ஆளுநரின் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்றுமுன் தினம் (31.01.2024) இடம்பெற்றது.
அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் கடந்த வருடத்தில் மாத்திரம் 3187.649 (மூவாயிரத்து நூற்று எண்பத்தேழு தசம் ஆறு நான்கு ஒன்பது) மில்லியன் ரூபா செலவில் வடக்கு மாகாணத்தில் பல்வேறு வகையான பயிற்சி செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துளசேன தெரிவித்தார். அத்துடன் தற்போது மாகாணத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய செயற்பாடுகள் தொடர்பில் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் முன்மொழிவுகளை சமர்பித்தனர்.
அரச சார்பற்ற நிறுவனங்களினால் மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்குமான ஒத்துழைப்பை வழங்க தமது அமைச்சுக்கள் தயாராக உள்ளதாக ஆளுநர் தெரிவித்தார். அத்துடன் கீழ்வரும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் கௌரவ ஆளுநர் அறிவுறுத்தினார்.
வட மாகாணத்தில் இயங்கும் அனைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, அவற்றின் செயற்பாடுகளை பட்டியல்படுத்தல் வேண்டும்.
செயற்றிட்டங்கள்,முதலீடுகளில் வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வழிமுறைகளை திட்டமிடல் வேண்டும் .
பாடசாலை இடைவிலகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். BACK TO SCHOOL திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.
பின்தங்கிய பிரதேச சபைகளுக்கு வருமானங்களை பெற்றுக்கொள்ளும் செயற்றிட்டங்களை முன்மொழிய வேண்டும்.
விவசாய உற்பத்திகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதோடு, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும் ..
அத்தோடு, சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கான விசேட பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு தொழிற்துறையில் அபிவிருத்திகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார். அத்துடன் கலந்துரையாடலின் போது வழங்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை ஒரு மாதத்திற்குள் அமுல்படுத்த வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.