56 நிமிஷங்களில் நிர்மலா சீதாராமனின் இடைக்கால பட்ஜெட் உரை
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 6-ஆவது முறையாக வியாழக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரை சுருக்கமாக 56 நிமிஷங்களில் முடிவடைந்தது.
பட்ஜெட் தாக்கல் தொடர்பான சுவாரசியமான அம்சங்கள் வருமாறு: மிக நீளமான பட்ஜெட் உரையை வாசித்தவர் என்ற பெருமை நிர்மலா சீதாராமனுக்கு உள்ளது. அவர் கடந்த 2020-இல் 2.40 மணி நேரம் ஆற்றியதே இதுவரை மத்திய நிதியமைச்சர் ஒருவர் வாசித்த நீண்ட பட்ஜெட் உரையாகும். இந்நிலையில், வியாழக்கிழமை அவர் மிகவும் குறைந்த நேரத்தில் (56 நிமிஷங்கள்) பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார். அவர் பட்ஜெட் உரையை வாசித்தபோது ஆளுங்கட்சி எம்.பி.க்கள் அவ்வப்போது மேஜையைத் தட்டி வரவேற்றனர். வரும் ஜூலை மாதத்தில் எங்கள் அரசு முழுமையான பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் என்று அவர் கூறியபோது ஆளுங்கட்சி எம்.பி.க்கள் பலத்த கைதட்டலை எழுப்பி வரவேற்பு தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகள் ஆட்சேபம்: மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு எங்கள் அரசு மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று அவர் கூறியதற்கு ஆட்சேபம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர்.
முன்னதாக, பகல் 11 மணிக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி மக்களவைக்கு வந்து தனது இருக்கையில் அமர்ந்தபோது பாஜக உறுப்பினர்கள் “பாரத் மாதா கீ ஜே’, “ஜெய் ஸ்ரீராம்’, “ஜெய் சியாராம்’ ஆகிய கோஷங்களை எழுப்பினர்.
கடந்த 2019-இல் இந்தியாவின் முதல் முழு நேர பெண் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரை 2 மணி நேரம் மற்றும் 17 நிமிஷங்களுக்கு நீடித்தது. அதைத் தொடர்ந்து 2021-இல் அவரது உரை 1.50 மணி நேரமும், 2022-இல் 1.32 மணி நேரமும், 2023-இல் 1.27 மணி நேரமும் நீடித்தது.
பிரதமரை எட்டு முறை குறிப்பிட்டார்: முந்தைய பட்ஜெட் உரைகளைப் போலன்றி நிர்மலா சீதாராமனின் உரையில் தமிழ்க் கவிஞர்கள், சிந்தனையாளர்களைப் பற்றிய குறிப்பு ஏதும் இடம்பெறவில்லை. எனினும் பிரதமர் மோடியைப் பற்றி தனது உரையில் எட்டு முறை குறிப்பிட்டார். அவரது பேச்சுகளில் இருந்தும் மேற்கோள் காட்டினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அண்மையில் இணைந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைரான ராஜீவ் ரஞ்சன் லலன் சிங், பட்ஜெட் உரையைப் பாராட்டி கைதட்டிய வண்ணம் இருந்தார்.
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்து முடித்தவுடன் அவரது இடத்துக்கு வந்த பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் சில அமைச்சர்களும் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மக்களவை பார்வையாளர் மாடத்தில் 2-ஆவது அரங்கில் சில மாநிலங்களவை எம்.பி.க்கள் அமர்ந்திருந்தனர். மூன்றாவது அரங்கில் நிர்மலா சீதாராமனின் உறவினர்களான கிருஷ்ணமூர்த்தி லட்சுமிநாராயண், வித்யா லட்சுமிநாராயண், நிர்மலாவின் மகள் வாங்மயி பரகாலா ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
குடியரசுத் தலைவர் வாழ்த்து: பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன்பு குடியரசுத் தலைவர் திரெüபதி முர்முவை அவரது மாளிகைக்குச் சென்று நிர்மலா சீதாராமன் சந்தித்தார். நிதித் துறை இணை அமைச்சர்கள் பங்கஜ் சௌதரி, பகவத் கராத் மற்றும் நிதி அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் சந்தித்தனர்.
அப்போது நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு வழங்கி, சிறப்பாக பட்ஜெட் தாக்கல் செய்யுமாறு திரெüபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த 2019-இல் பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த நிர்மலா சீதாராமன், அதற்கு முன் நிதி அமைச்சர்கள் வழக்கமாகக் கொண்டு வரும் “சூட்கேஸ்’ பெட்டிக்குப் பதிலாக பட்ஜெட் உரை மற்றும் இதர ஆவணங்கள் அடங்கிய டேப்லெட் கணினியைக் கொண்டு வந்தார்.
அப்போது முதல் ஆண்டுதோறும் இதே நடைமுறையைக் கடைப்பிடிக்கிறார்.