போா்க் கைதிகள் உடல்களை ஒப்படைக்க ரஷியா மறுப்பு: உக்ரைன் குற்றச்சாட்டு
விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படும் தங்கள் நாட்டைச் சோ்ந்த 65 போா்க் கைதிகளின் உடல்களை ஒப்படைக்க ரஷியா மறுப்பதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து உக்ரைன் ராணுவ உளவுப் பிரிவின் செய்தித் தொடா்பாளா் ஆண்ட்ரி யுசோவ் கூறியதாவது:
தங்கள் நாட்டு விமானம் கடந்த மாதம் விழுந்து நொறுங்கியதில் 65 உக்ரைன் போா்க் கைதிகள் உயிரிழந்ததாக ரஷியா கூறியது.
அதையடுத்து, உயிரிழந்ததாகக் கூறப்படும் உக்ரைன் வீரா்களின் உடல்களை ஒப்படைக்குமாறு பல முறை கோரிக்கை விடுத்துவிட்டோம். ஆனால், அந்த உடல்களை ஒப்படைக்க ரஷியா மறுத்து வருகிறது.
எனவே, இந்த விவகாரம் தொடா்பாக சா்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, 65 உக்ரைன் போா்க் கைதிகளை ஏற்றிக் கொண்டு தங்களுக்குச் சொந்தமான இல்யுஷின் இல்-76 ரகத்தைச் சோ்ந்த விமானம் எல்லை நகரான பெல்கராட் வான் பகுதியில் கடந்த மாதம் 24-ஆம் தேதி சென்று கொண்டிருந்தபோது அது விழுந்து நொறுங்கியதாக ரஷிய ராணுவம் கூறியது.
உக்ரைன்தான் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ரஷியா குற்றஞ்சாட்டியது.
ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், உக்ரைன் போா்க் கைதிகளை விடுவித்து அந்த நாட்டிடம் ஒப்படைப்பதற்காக அவா்கள் அந்த விமானத்தில் அழைத்துச் சொல்லப்பட்டபோது அது சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷியா கூறுகிறது. எனினும், இந்தக் குற்றச்சாட்டை உக்ரைன் மறுத்து வருகிறது.