ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகும் ரணில்: விசேட குழு நியமனம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான தேர்தல் குழுவொன்றை ஐக்கிய தேசியக் கட்சி நியமித்துள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.தே.க. தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பிரச்சார பொறிமுறை
இந்தக் குழுவுக்கு மேலதிகமாக ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு மேலும் பல குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் போது ஐ.தே.க. வுக்குப் பொருத்தமான பிரச்சார பொறிமுறையொன்றை வகுப்பது இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதான பணியாகும்.
அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் ஏனைய கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதும் இந்தக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள இன்னொரு பிரதான பொறுப்பாகும்.
ஐ.தே.க.கட்சியின் தலைமையகமான ஶ்ரீகொத்த நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷமல் செனரத், ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட முகாமையாளர் லசந்த குணவர்தன, செயற்குழு உறுப்பினர் கிரிஷான் தியோடர் ஆகியோர் தேர்தல் நடவடிக்கைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.