தனது கட்சியை விமர்சிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன்: சஜித் எச்சரிக்கை
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தன்னையும் தனது கட்சியையும் விமர்சிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன் என்று எச்சரித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் (ஓய்வுபெற்ற) தயா ரத்நாயக்கவை கட்சியின் மூத்த ஆலோசகராக நியமிக்க பிரேமதாச எடுத்த தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர் பொன்சேகா விமர்சித்த சில நாட்களுக்குப் பின்னர் பிரேமதாசவின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
ஒழுக்காற்று நடவடிக்கை
இது குறித்து அவர் தெரிவித்ததாவது,
“யாருக்கு நான் கட்சி உறுப்புரிமை வழங்க வேண்டும் என்று யாரும் தமக்கு சொல்ல வேண்டாம். எனக்கு அறிவுரை கூற முயல்பவர்களை புறக்கணிப்பேன்.
கட்சியை விமர்சிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க துணிச்சலான முடிவுகளை எடுக்க தயங்கமாட்டேன்.
கட்சியைப் பாதுகாப்பதும், எதிர்காலத் தேர்தல்களில் அது வெற்றிபெறுவதைப் பார்ப்பதும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் கடமையாகும்.
அந்தக் கடமையைச் செய்ய முடியாதவர்கள் வெளியேற வேண்டும். சிலர் தமது தந்தைக்கும் தனக்கும் இடையே ஒற்றுமையை வரைய முயற்சிக்கிறார்கள்.
இருப்பினும், தாம், தமது தந்தையின் அபிவிருத்தி மாதிரியை மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன். எனினும் தமக்கும் தமது தந்தைக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.