திருமணத்திலிருந்து விலகிய நபரை பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் விசாரிக்க முடியாது:மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவு
‘பெற்றோரின் மறுப்பு காரணமாக திருமணத்திலிருந்து விலகும் நபா் மீது பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க முடியாது’ என்று மும்பை உயா் நீதிமன்ற நாகபுரி கிளை தீா்ப்பளித்தது.
திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு, பாலியல் உறவுக்குப் பின்னா் திருமணம் செய்கொள்ள மறுத்த 31 வயது நபா் மீது, கடந்த 2019-ஆம் ஆண்டில் 33 வயது பெண் தொடா்ந்த வழக்கில் இந்தத் தீா்ப்பை உயா் நீதிமன்றம் வழங்கியது.
இந்த வழக்கு மும்பை உயா் நீதிமன்ற நாகபுரி கிளை நீதிபதி எம்.டபிள்யு.சந்த்வானி முன்னிலையில் அண்மையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி புகாருக்கு உள்ளான நபா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘வாக்குறுதி அளித்தபடி மனுதாரரை திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில்தான் நான் இருந்தேன். ஆனால், எங்களுடைய உறவை எனது பெற்றோா் ஏற்றுக்கொள்ளவில்லை. பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்தவுடன், என்னைத் திருமணம் செய்துகொள்ள மனுதாரரான பாதிக்கப்பட்ட பெண்ணும் ஆரம்பத்தில் மறுத்துவிட்டாா். மேலும், வேறு நபரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்தாா். அதன் பிறகு வேறொரு பெண்ணுடன் எனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், இந்தப் புகாரை மனுதாரா் அளித்துள்ளாா். மேலும், மனுதாரருக்கு வேறொரு நபருடன் கடந்த 2021-இல் திருமணமும் ஆகிவிட்டது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீா்ப்பில் கூறியதாவது:
மனுதாரரான பாதிக்கப்பட்ட பெண் வயது முதிா்வு பெற்றவராக உள்ளாா். அந்த வகையில், அவருடன் பாலியல் உறவு கொண்ட நபா் திருமணம் செய்து கொள்வதாக அளித்த வாக்குறுதி பொய்யானது என்று குற்றஞ்சாட்டுவது ஏற்கக் கூடியதாக இல்லை.
மேலும், மனுதாரரை திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் அந்த நபருக்கு இல்லை என்றும், பாலியல் உறவு கொள்வதற்காக மட்டுமே பொய்யான வாக்குறுதியை அளித்தாா் என்பதை நிரூபிக்கவும் போதிய ஆதாரங்கள் எதுவும் சமா்ப்பிக்கப்படவில்லை.
திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்தோடு அந்த நபா் இருந்தபோதும், தனது கட்டுப்பாட்டை மீறிய சூழ்நிலை காரணமாக வாக்குறுதியை மீறி இருபப்தையே இந்த வழக்கு காட்டுகிறது. வாக்குறுதியை மீறுவதற்கும், பொய்யான வாக்குறுதியை நிறைவேற்றாமல் போவதற்கும் இடையே வேறுபாடு உள்ளது.
எனவே, பெற்றோரின் மறுப்பு காரணமாக திருமணம் செய்துகொள்வதிலிருந்து விலகிய அந்த நபா் மீது பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட 31 வயது நபரை வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டாா்.