விமான நிலையத்தில் கடுமையாகும் கட்டுப்பாடு
நாட்டிற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் அனைத்து மக்களையும் அடையாளம் காணும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
நாட்டிற்குள் பாரிய குற்றங்களை செய்த ஒருவர் குற்றம் செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பிச்செல்ல முயன்றால், அதை உடனடியாக இந்த எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு தடுக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அமைப்பில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், சந்தேகநபர்கள் விமான நிலையம் ஊடாக நாட்டிற்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ முயன்றால் தானாக அடையாளம் காண முடியும் என்றும் கூறப்படுகின்றது.
முக்கிய கலந்துரையாடல்
இவ்வாறான எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இராணுவப் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் ஆகியோர் அமெரிக்க அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.