முகாமையாளர் தாக்கி சீவல் தொழிலாளி உயிரிழப்பு
பனை தென்னை வள சங்க முகாமையாளரின் தாக்குதலுக்கு இலக்கான சீவல் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கரவெட்டி வடக்கை சேர்ந்த வேலன் பிரேமதாஸா (வயது 54) என்பவரே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 28ஆம் திகதி பனை தென்னை வள சங்கத்திற்கு தொழிலாளி சென்ற வேளை , முகாமையாளருடன் தர்க்கம் ஏற்பட்டதை அடுத்து , தொழிலாளி மீது முகாமையாளர் மூர்க்க தனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
அதனை அடுத்து வீடு திரும்பிய தொழிலாளி , சுகவீனமுற்ற நிலையில் 31ஆம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் , கால் மற்றும் விலா எலும்புகளில் முறிவுகள் ஏற்பட்டு உள்ளமையும் , அந்த முறிவுகளினால் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக நிமோனியா ஏற்பட்டு , உயிரிழப்பு சம்பவித்துள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , முகாமையாளரை கைது செய்வதற்கான நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளனர்.