;
Athirady Tamil News

நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும்

0

அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களை அடக்குமுறையை பிரயோகித்து தாக்கி கைது செய்து அச்சுறுத்தியமைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பொலிசாரால் தாக்கப்பட்டமைக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினரும் வட்டுக்கோட்டை தொகுதி செயற்பாட்டாளருமான அ.ஜோன் ஜிப்பிரிக்கோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகம் தனது சுயநிர்ணய உரிமையை இழந்த நிலையிலே இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நாள் தமிழர்களை பொறுத்தவரை சுதந்திரம் இழந்த கரிநாள் என்பதை பிரகடனப்படுத்தி அமைதிவழியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள்,அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்களின் பங்கேற்போடு கிளிநொச்சியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது.

அதன் போது எவ்வித முகாந்திரங்களுமின்றி பொலிசார் பலாத்காரமாக அடக்குமுறையை பிரயோகித்து குழப்ப முயன்றதோடு போராட்டக்காரர்களை தாக்கி பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து அச்சுறுத்தியது.

இதனை பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியாக தடுக்க முனைந்த தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சிறீதரனை ஒரு மக்கள் பிரதிநிதி எனக்கூட பாராமல் அவரது பாராளுமன்ற சிறப்புரிமையைதவறு மீறும் வண்ணம் பொலிசார் தாக்கியமை இந்த நாட்டிலே சனநாயக வழி போராட்டங்களிற்கு என்ன சட்டபாதுகாப்பு இருக்கிறது என்பதை தெளிவாக காட்டியுள்ளது.

அமைதி வழியில் போராடிய போராட்டகாரர்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டிய பொலிசாரே குழப்பவாதிகளாக வன்முறையை பிரதிநிதிகளாக இருப்பது சனநாயகத்தின் மீதான அரச இயந்திரத்தின் அச்சுறுத்தலாகவே நாம் கருத வேண்டியுள்ளது.

அமைதியாக அணுகுவதை விடுத்து அராஜக முறையில் அச்சுறுத்தும் பாணியில் பொலிசார் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரை அணுகியமையை வன்மையாக கண்டிக்கின்றேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் வடகிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்டு கட்சி பேதமின்றி இதை கண்டித்து குரல் எழுப்ப வேண்டுமெனவும் என தமது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.