;
Athirady Tamil News

மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட மன்னர் சார்லஸ்…

0

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய மன்னர் சார்லஸ், மக்களிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட மன்னர் சார்லஸ்…
மன்னர் சார்பில் பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தனது உடல் நல பாதிப்பு காரணமாக எதிர்வரும் சில பொது நிகழ்ச்சிகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதற்காக, மன்னர் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவருக்கு நேற்று வழக்கமான சிகிச்சைகள் துவக்கப்பட்டுள்ளதாக அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது, ஆகவே, அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தற்காலிகமாக நிறுத்திவைக்க உள்ளார் என்றும், ஆனாலும், ஒரு மன்னராக தான் செய்யவேண்டிய ஆவணங்கள் தொடர்பான பணிகள் மற்றும் தனிப்பட்ட வகையிலான சந்திப்புகளைத் தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மன்னர் அதிகமாக யாரையும் சந்திக்கக்கூடாது என மருத்துவர்கள் ஆலோசனையளித்தாலன்றி, வாரம் ஒரு முறை பிரித்தானிய பிரதமரை சந்திக்கும் அவரது பணி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகள்
வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதி, வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் காமன்வெல்த் தின ஆராதனை நடைபெறும் நிலையில், மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்கும் அந்த நிகழ்ச்சியில் மன்னர் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மன்னர் சார்லசும், ராணி கமீலாவும் மே மாதம் கனடாவுக்கும், அக்டோபரில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் சமோவா ஆகிய நாடுகளுக்கு காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்துக்காகவும் செல்வதாக இருந்தது.

இந்த நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்பார்களா என்பது குறித்து இனிதான் உறுதிசெய்யப்பட உள்ளது.

இந்நிலையில்தான், தனது உடல் நிலை காரணமாக ஏமாற்றம் அல்லது அசௌகரியத்தை சந்திக்கும் நிலைக்குள்ளான அனைவரிடமும் மன்னர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார் என அவரது சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.