;
Athirady Tamil News

கல்வி நிர்வாகத்தில் நியமிக்கப்படும் ஓய்வு பெற்றவர்கள்: இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

0

கல்வி நிர்வாக சேவையில் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு வழங்கி கல்வியை சீரழித்துள்ளதாக மேல்மாகாண ஆளுநர் மீது இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அத்துடன், கல்வி நிர்வாக சேவை பதவிகளுக்கு செயற்படக்கூடிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவில்லை எனவும், ஓய்வுபெற்ற அதிகாரிகள் மேல் மாகாண கல்வி முறைக்குள் பிரதான பதவிகளில் எவ்வித அடிப்படையும் இன்றி தக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலதிக அதிகாரிகள்
இலங்கை கல்வி நிர்வாக சேவையின் ஓய்வுபெற்ற அதிகாரியான எல்.எச்.டபிள்யூ.ஆர். சில்வா மேல் மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) பதவிக்கு ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேல்மாகாண கல்வி முறைமையில் கல்வி நிர்வாக சேவையில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 244 எனவும், தற்போது பதவியில் உள்ள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 408 எனவும் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கை கல்வி நிர்வாக சேவையில் 164 அதிகாரிகள் மேலதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோசப் ஸ்டாலின் கருத்து
குறித்த விடயம் தொடர்பில் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில்,

“மேல்மாகாண ஆளுநர் தன்னிச்சையாக அரசியல் மற்றும் பிற நலன்களின் அடிப்படையில் மேல்மாகாண கல்விமுறையில் ஓய்வுபெற்ற அதிகாரிகளை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதால், மேல்மாகாண கல்விமுறை தொடர்ந்து சீர்குலைகின்றது.

செயற்படக்கூடிய சேவை உத்தியோகத்தர்களுக்கும் அந்த பதவிகளை பெறுவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும்” என தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தி தற்போது மேல்மாகாண கல்வி முறைமையில் சேவையை நீடித்த அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் உத்தியோகத்தர்களை நீக்கிவிட்டு செயற்படக்கூடிய உத்தியோகத்தர்களை பதவிகளுக்கு நியமிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.