மட்டக்களப்பில் நெல் கொள்வனவில் இடம்பெறும் மோசடி
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடைகள் நடைபெற்றுவரும் நிலையில் சில தனியார் நெல்கொள்வனவாளர்கள் மோசடியான முறையில் அளவைகள் மேற்கொண்டு நெல்கொள்வனவில் ஈடுபட்டுவருகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர் அமைப்புகளின் அதிகாரசபையின் தலைவர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று(07.02.2024) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் அறுவடை நடைபெற்றுக்கொண்டிருப்பதனால் கொள்வனவின்போது நிறுவை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலின் கீழ் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளயாளரின் ஒத்துழைப்புடன் அளவீடு அலகுகள் மற்றும் சேவைகள் திணைக்களத்துடன் மாவட்ட கமக்காரர்கள் அமைப்புகளாகிய நாங்களும் சென்று மாவடியோடை தொடக்கம் கிரான் வரையான பிரதேசங்களில் ஒன்பது லொறிகளை பரிசோதனை மேற்கொண்டோம்.
இதன்போது எட்டு லொறிகளில் இருந்த தராசுகளில் ஐந்து தராசுகள் இலங்கையில் பாவனைக்கு அனுமதி இல்லாத தராசுகளும் மூன்று தராசுகள் சீல் வைக்கப்படாத தராசுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.ஃ விவசாயிகளிடம் மூடைக்கு 66 கிலோ நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது.
எனினும் 65 கிலோவே ஒரு மூடையின் கொள்ளவு ஆகும்.விவசாயிகள் மூடைக்கு 65 கிலோ மட்டுமே விவசாயிகள் விற்பனை செய்யவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.
நெல் விலை தொடர்பில் அறுவடைக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே மாவட்ட செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தோம்.
அது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருக்கும் மாவட்ட அரசாங்க அதிபரினால் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டபோதிலும் இதுவரையில் அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு முன்னெடுக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.