சர்வதேச விமான நிலைய பட்டியலில் சேர்ந்த சூரத் விமான நிலையம்… வியக்கவைக்கும் வசதிகள்!
குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் புதிதாக கட்டப்பட்ட சூரத் விமான நிலையம் இந்தியாவின் சர்வதேச விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கடந்த மாதம் தான் இதற்கான அனுமதி கோரி விமானத்துறை அமைச்சகத்திற்கு முன்மொழிவுகள் அனுப்பியிருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குஜராத் மாநிலத்தவருக்கு மட்டுமல்ல பலருக்கும் சந்தோஷமான செய்தியாகும்.
எந்தவித தாமதமும் இன்றி உடனடியாக குஜராத் மாநிலத்தின் சூரத் விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்படுவதாக இந்திய விமானத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள செய்தியை ANI செய்தி நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. பல சோசியல் மீடியா தளங்களிலும் இதுகுறித்த செய்தி பகிரப்பட்டுள்ளது.
இதன் மூலம் குஜராத் மாநிலத்தின் சுற்றுலா மேலும் வளர்ச்சி அடையும் எனவும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகளுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விமானத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி சூரத் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளது.
சூரத் நகரின் நுழைவாயிலாக இருக்கும் இந்த விமான நிலையத்தின் கட்டிட அமைப்பு உள்ளூர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரிய மின் உற்பத்தி நிலையம், மழைநீர் சேகரிப்பு வசதிகள், மின் ஆற்றலை சேமிப்பதற்கு வசதி, தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என பல வசதிகள் இந்த விமான நிலையத்தில் உள்ளது.
சூரத் விமான நிலையத்தின் உள்நாட்டு சேவை:
சூரத் விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் செல்லக் கூடிய வகையில் விமான சேவை உள்ளது. முக்கியமாக சென்னை, டெல்லி, கொல்கத்தா பெங்களூரு, கோவா, ஹைதராபாத், புனே, பெல்காம், ஜெய்பூர், உதய்பூர், இந்தூர், டையூ மற்றும் கிஷங்கார் போன்ற நகரங்களுக்கு சூரத் விமான நிலையத்திலிருந்து நேரடி விமனப் போக்குவரத்து உள்ளது. சர்வதேச பாதைகளை பொறுத்தவரை ஷார்ஜா வழியாக பல நாடுகளுக்கும் இங்கிருந்து விமான சேவை உள்ளது.
பயணிகளை கையாளும் திறன்:
சூரத் சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ விவரங்களின் படி, புதிய டெர்மினல் ஒரே சமயத்தில் 600 சர்வதேச பயணிகளையும், 1200 உள்நாட்டு பயணிகளையும் கையாளும் திறன் உள்ளது. மேலும் 3,000 பயணிகளை கையாளும் வகையில் நீடித்த பரப்பளவையும் இந்த விமான நிலையம் கொண்டுள்ளது. இதன் மூலம் வருடத்திற்கு 55 லட்சம் பயணிகளை கையாளும் திறனையும் சூரத் விமான நிலையம் பெற்றுள்ளது. 2906 X 45 நீளமுள்ள ரன்வேயை கொண்டுள்ள இந்த விமான நிலையத்தில், ‘C’ வகை விமானங்கள் எளிதாக தரையிறங்கும் வசதி உள்ளது.