காவல் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம் : வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட சந்தேக நபர்கள்
ஆட்டுபட்டிதெரு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவருக்கு இனந்தெரியாத ஒருவரால் விஷம் கலந்த பால் வழங்கப்பட்டுள்ள நிலையில், குறித்த இருவரும் மயக்கமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் ஆட்டுப்பட்டித்தெரு காவல் நிலையத்தில் நேற்று (7) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் ஜிந்துபிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என அடையாளம் காணப்பட்ட நபரும், அதற்கான தகவல்களை வழங்கிய நபருக்குமே இவ்வாறு பாலில் விஷம் கலந்து வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஜிந்துபிட்டியில் துப்பாக்கிச் சூடு
கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி ஜிந்துபிட்டியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காயமடைந்தார்.
இதையடுத்து சந்தேக நபர்களில் ஒருவரை பிரதேசவாசிகள் மடக்கிப்பிடித்ததுடன் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பிச் சென்றார்.
பின்னர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர் தப்பியோடிய நிலையில் கைது செய்யப்பட்டதுடன், இரு சந்தேக நபர்களும் ஆட்டுப்பட்டி தெரு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், துப்பாக்கிதாரியின் காதலி என்று கூறப்படும் பெண்ணொருவர் நேற்று காலை ஆட்டுப்பட்டி தெரு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவரிடம் நலம் விசாரித்ததுடன் மற்றைய சந்தேக நபரிடம் வேறு ஒருவரும் நலம் விசாரித்துள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
குறித்த நபர், காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இரண்டு மீன் பணிஸையும் பால் பக்கெட்டையும் கொடுத்து விட்டு சென்றுள்ள நிலையில், அவர் துப்பாக்கிதாரியான சந்தேக நபருக்கு தம் கையில் வைத்திருந்த பால் பக்கெட்டினை வழங்கியுள்ளதாக துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் காதலி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் பாலைக் குடித்த துப்பாக்கிதாரியான சந்தேக நபர் சுருண்டு விழுந்ததுடன், மற்றைய சந்தேக நபர் தரையில் விழுந்த பால் பக்கெட்டை எடுத்து குடித்துள்ளதால் மயக்கமடைந்த இரு சந்தேக நபர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த பால் பக்கெட்டில் விஷம் கலந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிப்பதுடன் பால் பக்கெட்டை கொடுத்த நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.