டீசல் விற்பனை: எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.3 இழப்பு
டீசல் விற்பனையால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.3 இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய எரிபொருள் சந்தையில் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றின் பங்கு 90 சதவீதமாக உள்ளது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையில் சுமாா் 2 ஆண்டுகளாக எண்ணெய் நிறுவனங்கள் எந்த மாற்றமும் செய்யவில்லை.
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதி செய்யப்படும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையை மாற்றாததால் எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது: கரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்தில், சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மிகவும் சரிந்தது. அதன் பின்னா் உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தபோது, கச்சா எண்ணெய் 14 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு அதிகரித்தது.
இந்நிலையில், அண்மைக் காலமாக சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இதனால் எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு டீசல் விற்பனையால் லிட்டருக்கு ரூ.3 இழப்பு ஏற்படுகிறது. பெட்ரோல் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயும் சரிந்துள்ளது.
கச்சா எண்ணெய் தேவையில் பெருமளவை இறக்குமதி மூலம் பூா்த்தி செய்யும் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலை உயா்வு என்பது பணவீக்கத்தை மேலும் அதிகரிப்பதுடன், கரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதைத் தடம்புரளச் செய்யும் என்று தெரிவித்தன.