தென்னிந்திய நடிக நடிகைகளுடன் புகைப்படம் எடுக்க யாழ்.மாநகர சபையிடம் அனுமதி பெறவில்லை
யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய திரைப்பட நடிகர் நடிகைகளோடு புகைப்படம் எடுப்பதற்கும் சந்திப்பதற்கும் 30 ஆயிரம் ரூபாய் கட்டணம் அறவிடப்படும் நிகழ்வுக்கு யாழ் மாநகர சபையிடம் எவ்வித அனுமதியும் இதுவரை பெறப்படவில்லை என தெரியவந்துள்ளது
கேளிக்கை நிகழ்வுகளுக்கு நுழைவுச்சீட்டு விற்பனை செய்வதாயின் மாநகர சபையின் அனுமதி பெறப்படவேண்டும் என்பதுடன், நுழைவுச் சீட்டின் பெறுமதியில் குறிப்பிட்ட வீதம் மாநகர சபைக்கு வரியாக செலுத்தப்பட வேண்டும் என்பது நடைமுறையாகவுள்ளது.
எனினும், அவ்வாறான எவ்வித அனுமதிகளும் இன்றி நேற்றைய தினம் வியாழக்கிழமை மற்றும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடிகர் நடிகைகளோடு புகைப்படம் எடுப்பதற்கும் சந்திப்பதற்கும் 30 ஆயிரம் ரூபாய் கட்டணம் அறவிடப்படும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அது தொடர்பிலான விளம்பரம் சமூக ஊடகங்களில் சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில் குறித்த நிகழ்வு தொடர்பாக தம்மிடம் அனுமதி கோரப்படவில்லை எனவும் அவ்வாறு நடந்தால் அதற்கான கட்டணம் அறவிடப்படும் என யாழ் மாநகர சபை ஆணையாளர் தெரிவித்தார்.
மேலும் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி தொடர்பில் 25000 ரூபாய் அனுமதிக் கட்டணத்தில் 500 இருக்கைகளுக்கும், 7000 ரூபாய் அனுமதிக் கட்டணத்தில் 1000 இருக்கைகளுக்கும், 3000 ரூபாய் அனுமதிக் கட்டணத்தில் 2000 இருக்கைகளுக்கும் மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.