ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் எதிர்க்கட்சிகள் வீதியில் இறங்கும் : லக்ஷ்மன் எச்சரிக்கை
ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் வீதியில் இறங்கும் என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய (08.02.2024) அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அவர் மேலும் தெரிவித்தாவது,
“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் போர்வையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் ஒரு மோசமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி அதற்கு கால அவகாசம் வாங்குவதே இந்த நடவடிக்கையாகும். உண்மையில் அரசியலமைப்பை மாற்றுவதற்கு ஒரு வருட கால அவகாசம் கோருவதே திட்டமாகும்.
குறைந்த பட்சம் உள்ளாட்சி தேர்தலையாவது நடத்துமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்போம். மக்கள் தேர்தலை விரும்புகிறார்கள். அதே நேரம் ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் வீதியில் இறங்கும் ”என அவர் எச்சரித்துள்ளார்.