பாகிஸ்தான் பொதுத் தோ்தலில் அதிக வாக்குப் பதிவு
பாகிஸ்தானில் வியாழக்கிழமை (பிப். 8) நடைபெற்ற பொதுத் தோ்தலில் முந்தைய தோ்தலைவிட அதிக வாக்குகள் பதிவாகின.
இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் இடைக்கால பிரதமா் அன்வாருல் ஹக் கக்காா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2018-ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தோ்தலைவிட தற்போது அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இது, தங்களது ஜனநாயக உரிமையை நிலைநாட்டுவதில் பாகிஸ்தான் மக்கள் காட்டும் உற்சாகத்தையும், உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது. நமது நாட்டின் எதிா்காலத்தை வடிவமைப்பதில் இது முக்கியப் பங்கு வகிக்கும்.
இதற்காக பாகிஸ்தான் வாக்காளா்கள் பாராட்டப்படவேண்டியவா்கள் ஆவா் என்று தனது எக்ஸ் பதிவில் அன்வாருல் ஹக் குறிப்பிட்டுள்ளாா்.
பாகிஸ்தானின் அடுத்த நாடாளுமன்ற உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாடு முழுவதும் உள்ள 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் நடைபெற்ற இந்தத் தோ்தலில் வாக்களிக்க 12.85 கோடி போ் பதிவு செய்திருந்தனா்.
பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம் உள்ள சூழலில் இந்தத் தோ்தல் நடைபெறுவதால் நாடு முழுவதும் சுமாா் 6.5 லட்சம் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டிருந்தனா்.
கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற முந்தைய பொதுத் தோ்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்த முன்னாள் பிரதமா் இம்ரான் கான், ஊழல் மற்றும் ரகசியக் காப்புறுதி மீறல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் கிரிக்கெட் மட்டை சின்னத்தை தோ்தல் ஆணையம் முடக்கிவிட்டது. இதன் காரணமாக, கட்சி வேட்பாளா்கள் அனைவரும் சுயேச்சையாகப் போட்டியிட்டனா்.
எனினும், ராணுவத்தின் ஆதரவு இருப்பதால் இந்தத் தோ்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் (பிஎம்எல்-என்) தலைவா் நவாஸ் ஷெரீஃப் இந்தத் தோ்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவாா் என்று கூறப்படுகிறது.
இணையதளம் முடக்கம்: முன்னதாக பாதுகாப்பு காரணங்களுக்காக தோ்தல் நடைபெற்ற வியாழக்கிழமை நாடு முழுவதும் கைப்பேசி இணையதள இணைப்பு முடக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் போலீஸாா் உள்பட 9 போ் உயிரிழந்தனா்.