தனிப்பட்ட குரோதத்தினால் நன்மை கிடைக்கப் போவதில்லை!
குறுகிய அரசியல் சுயலாப நோக்கங்களையும், தனிப்பட்ட குரோத மனப்பான்மைகளையும் முன்னெடுத்து வருவதால் எவ்விதமான நலன்களும் இந்த நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ கிட்டப் போவதில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் நாடாளுமன்றில் இன்றையதினம் (09) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
‘இந்த நாடு பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து இன்னமும் முழுமையாக மீட்சிப் பெறவில்லை. முழுமையான மீட்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றது. இதன்போது வலிகள் – வேதனைகள் என்பன தவிர்க்க முடியாதவை. கரடு முரடான பாதையைக் கடக்க வேண்டுமென்றால் இவற்றையெல்லாம் எதிர்கொண்டாகவேண்டும்.
அந்த வகையில் இன்றும் எமது மக்களுக்கான வேதனைகள் இல்லாமல் இல்லை. வெளியில் தெரிகின்ற வகையிலும், வெளியே தெரியாத வகையிலும் எமது மக்களில் பெரும்பாலானவர்கள் தங்களது வாழ்க்கையினை முன்னெடுப்பதில் பல சிரமங்களுக்கு, பாதிப்புகளுக்கு உட்பட்டே வாழ்ந்து வருகின்றனர்.
அதேநேரம் இன்று அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களும் தடையின்றி கிடைக்கப் பெற்றாலும், அவற்றின் விலைகளில் பாரிய அதிகரிப்புகள் காணப்படுகின்றன.
இன்னும் ஓரிரு வருடங்கள் இதனை சகித்துக் கொண்டால், ஒரு முன்னேற்றமான நல்ல நிலையினை நாம் பெற்றிட முடியும் என்ற நம்பிக்கையை ஜனாதிபதி அவர்களின் செயற்பாடுகள் எடுத்துக் காட்டி வருகின்றன.
அந்த வகையில்தான் ஜனாதிபதி அவர்களுக்கு ஒத்துழைப்பினை வழங்குவதன் மூலம் இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் நல்ல நிலைக்குக் கொண்டு வர முடியும் எனப்தை நான் வலியுறுத்தி வருகின்றேன்.
எமது மக்களின் அன்றாடப் பிரச்சினைகளாக இருந்தாலும் சரி, அரசியல் தீர்வுப் பிரச்சினையாக இருந்தாலும் சரி.
இந்த காலகட்டத்ததை நாம் தவற விடுவோமானால், மீளவும் இத்தகையதொரு பொன்னான காலத்தை நினைத்துப் பார்க்க இயலாது என்றே கருதுகிறேன்.
தேர்தல்களில் நாங்கள் தனித்தனியே போட்டியிடுவோம். நாட்டைக் கட்டி எழுப்புவதில் ஒன்றிணைவோம் என்ற ஜனாதிபதி அவர்களது அழைப்பினையே நான் மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.
இந்த நாடு அனைத்து நிலைகளிலும் வீழ்ந்திருந்த நிலையில், இந்த நாடு இத்தனைக் குறுகிய காலத்துள் இந்தளவு எழுந்திருக்கும் என எவரும் எண்ணியிருக்க மாட்டார்கள். அது இன்று சாத்தியமாக்கப்பட்டு வருகின்றது.
இத்தகைய சாதனையை நிகழ்த்திக் காட்டி வருகின்ற ஜனாதிபதி அவர்களால், எமது மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது என்றில்லை.
அவருக்கு எமது அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்புகள் முழுமையாக கிடைக்கின்ற சந்தர்ப்பத்தில் அவை அனைத்தும் சாத்தியமாகும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.
அந்த நம்பிக்கையை நிறைவேற்ற அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்’ என மீண்டும் வலியுறுத்துவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.