குழந்தைகள், பெண்கள் 9 பேர் பலி: அடுத்த இலக்கு ராபா?
மத்திய காஸா மற்றும் தெற்கு நகரமான ராபாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் 9 பேர் பலியாகியுள்ளனர்.
ராபாவில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீதும் ஜுவைதா பகுதியில் அகதிகள் முகாமாக மாற்றப்பட்ட மழலையர் பள்ளி மீதும் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். பலியானவர்கள் மற்றும் காயமுற்றவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதை அசோசியேடட் பிரஸ் செய்தியாளர்கள் பார்த்துள்ளனர்.
இஸ்ரேலின் தரைப்படைகள் தற்போதைக்கு கான் யூனிஸில் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் விரைவில் தெற்கு நகரமான ராபா நோக்கி விரிவுபடுத்தவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு தெரிவித்தது லட்சக்கணக்கான மக்களின் நிலையைக் கேள்விக்குள்ளாகியுள்ளது.
ராபா எல்லைப் பகுதி வழியாக மக்கள் திரளாக எகிப்துக்குள் தஞ்சம் தேடும் நிலை உருவாகும் அபாயம் உள்ளது.
எகிப்து, ராபா நோக்கிய படைகளின் முன்னேற்றம், 40 ஆண்டுகாலமாக இஸ்ரேல்-எகிப்து இடையே நீடித்து இருக்கும் உடன்படிக்கையை மீறும் செயல் எனத் தெரிவித்துள்ளது.