தேர்தல் தகராறு.. ஃபேஸ்புக் நேரலையில் சுட்டுக்கொலை… நாட்டை உலுக்கிய சம்பவம்
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் முன்னாள் கவுன்சிலர் அபிஷேக். இவர் மும்பை தகிஷர் பகுதியில் உள்ள ஐசி காலனியில் வசித்து வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்தவர்மவுரிஸ் நொரோனா.
ஐசி காலனி பகுதியில் பிரபலமான சமூக ஆர்வலராக விளங்கிய மவுரிஸ் நொரோனா, கொரோனா தொற்று காலத்தில் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற கவுன்சிலர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார் மவுரிஸ் நொரோனா. அந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்த நிலையில், 48 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, மிரட்டல் விடுத்ததாக காவல்துறை மவுரிஸ் நொரோனா மீது வழக்குப்பதிவு செய்தது.
2014இல் அளிக்கப்பட்ட புகாரில் 2022ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைதானதால், இதற்கு உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த அபிஷேக்தான் காரணம் என நினைத்துள்ளார் மவுரிஸ் நொரோனா.
இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ஐசி காலனியைச் சேர்ந்த முக்கிய நபர்களின் அறிவுறுத்தலின்பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் சமாதானம் ஆகியுள்ளனர். இந்த நிலையில், தனது அலுவலகத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக அபிஷேக்கை அழைத்துள்ளார் மவுரிஸ். ஏழைப் பெண்களுக்கு புடவைகள் மற்றும் சில பொருட்களை வழங்கியபிறகு, ஐசி காலனியின் வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்ற இருப்பதாக, பேஸ்புக் நேரலையில் பேசிக் கொண்டிருந்தனர் இருவரும்.
35 நிமிடங்கள் இருவரும் நேரலையில் பேசி முடித்தபிறகு, அபிஷேக் எழுந்த நேரத்தில், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுடத் தொடங்கினார் மவுரிஸ். முதல் குண்டு அபிஷேக் வயிறை துளைத்த நிலையில், அடுத்தடுத்து 3 குண்டுகள் அவரது உடலை பதம்பார்த்தன. யாரும் எதிர்பாராத நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை மட்டுமல்லாது நேரலையை பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் உலுக்கியது.
மவுரிஸ் நொரோனா 5 முறை சுட்ட நிலையில், அதில் 4 குண்டுகள் அபிஷேக் உடலில் பாய்ந்ததால், ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் அபிஷேக். இதையடுத்து, தானும் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு கீழே சரிந்தார் மவுரிஸ் நொரோனா. உடனடியாக அங்கிருந்தவர்கள், அபிஷேக்கையும், மவுரிஸையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், இருவரும் வரும் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மும்பை காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், அதில் அரசியல் பின்புலம் இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது உத்தவ் தாக்கரே அணி. கொலையாளி மவுரிஸ் நொரோனாவை 4 நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சந்தித்ததாக கூறியுள்ளார் உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் ராவத். மகாராஷ்டிராவில் குண்டர் ஆட்சி நடைபெறுவதாகவும், முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் சஞ்சய் ராவத். இதனிடையே, கொலைக்கான உண்மையான காரணங்கள் குறித்து விசாரித்து வருவதாக கூறியுள்ளது மும்பை காவல்துறை.