போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ஏற்படப்போகும் சிக்கல் : எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை
நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, உழைத்தவர்களுடைய அனைத்து சொத்துக்களையும் அரச உடமையாக்கும் முறையை நடைமுறைப்படுத்தவுள்ளோம் என பதில் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் போதைப்பொருள் அற்ற நிலையை இன்னும் ஒன்றரை மாதத்துக்குள் உருவாக்குவோம் என அவர் மேலும் உறுதியளித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
சொத்துக்களையும் அரச உடமையாக்குதல்
போதைப்பொருளுடன் ஒருவர் அகப்பட்டதும் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி இரண்டு மாதங்கள் சிறையில் வைத்திருந்து வெளியில் அனுப்பும் முறைமைக்கு பதிலாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, அதன் மூலம் உழைத்த அவர்களுடை அனைத்து சொத்துக்களையும் அரச உடமையாக்கும் முறையை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.
யுக்திய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தக் காலப்பகுதிக்குள் போதைப்பொருளினால் சம்பாதிக்கப்பட்ட 726 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டத்தின் கீழ் காவல்துறையினரின் பொறுப்பின் கீழ் கொண்டு வந்து, அவற்றை அரசுடமையாக்கும் நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளோம்.
காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு
இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது எனக்கும், அமைச்சருக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கின்றனர். நாட்டு மக்கள் காவல்துறையினரை உற்சாகப்படுத்துங்கள்.
பிழைகள் செய்கின்ற மற்றும் குறைபாடுகள் உள்ள காவல்துறை உத்தியோகத்தர்கள் காணப்படலாம். இந்நிலையில் இது தொடர்பில் விலகியிருந்தால் அல்லது கற்களை வீசினால், காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால் குற்றவாளிகள் அதனை பயன்படுத்திக்கொள்வார்கள்” என தெரிவித்தார்.